சனல்-4 குழுவினருக்கெதிரான ஆர்ப்பாட்டம் வடகிழக்கு மாகாணம் வேறானது என்பதை உணர்த்துகின்றதா?- பா.அரியநேத்திரன் கேள்வி

ariyenthiranஇலங்கை இறைமையுள்ள ஜனநாயக நாடு என்று கூறும் அரசாங்கம், சனல்-4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே குழுவினருக்கு எதிராக அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமானது, நன்கு திட்டமிட்ட வகையில் நடந்தப்பட்டமை நிரூபனமாகி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
சனல்-4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே குழுவினர், யாழ்ப்பாணம் சென்று கொண்டு இருந்தபோது அனுராதபுரத்தில் ரயிலை வழிமறித்து அவர்களை போகவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கருத்துக்கூறும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பொதுநலவாய மாநாட்டிற்கு ஏனைய நாடுகளில் இருந்து வருகைதரும் பிரதிநிதிகளும், ஊடகவியலாளர்களும் இலங்கையின் எப்பாகத்திற்கும் சென்றுவரமுடியும் அப்படி இருந்தபோதும் வடக்கிற்குச் செல்வதற்கு ஏற்பாடாகி சென்றுகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதன் மர்மம்தான் என்னவாக இருக்கும் என்பது புலனாகவில்லை.

இலங்கையில் இருந்து வடகிழக்கு மாகாணம் வேறாக உள்ளது அதற்கு போவதற்கு அனுமதி இல்லை என்பதனால்தானா, சனல்-4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே குழுவினரின் வடமாகாண பயணம் இடைநடுவில் தடைப்பட்டதற்குக் காரணம் என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

எமது நாட்டைப் பொறுத்த வரையில் உண்மையான ஊடக சுகந்திரம், ஜனநாயகம், சமாதானம் இருக்கின்றது என்று பேச்சளவே தவிர செயலளவில் காட்ட முன்வருவதில்லை. இந்த நாட்டிலே தமிழர்கள் பலபகுதிகளிலும் வாழுகின்றார்கள். அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாகாணத்திலே அதிகளவானோர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை அறிவதற்காக அங்கு செல்ல நினைத்தது பிழையான செயலாக அரசாங்கத்தினால் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டிலே ஊடகவியலாளர்கள் காலாகாலமாக அச்சுறுத்தப்பட்டு வருவதும், கொலை செய்யப்பட்டு வருவதும் கடத்தப்பட்டு வருவதும் இந்நாட்டின் கலாசாரமாக மாறிவிட்டது. இதனையே தற்போது சர்வதேச ஊடகவியளாலர்களும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இவையனைத்திற்கும் அரசாங்கம் பின்புலத்தில் இருந்து செயற்பட்டமையே இவர்களது பயணம் நடைநடுவில் நிறுத்தப்பட்டதற்கு காரணமாகும் என்றார்.