கனடியத் தமிழர் வாழ்வில் ஒர் மைல்க் கல்லாய் வரலாறு படைத்த – பெற்னாத் தமிழ் விழா 2013

canada01பங்கேற்பாளர், தன்னார்வத் தொண்டர், புரவலர், கலைஞர், அறிஞர், விருந்தினர் என ஆயிரக் கணக்கான தமிழரால் வண்ணமயமாயும் தமிழ் எண்ணமயமாயும் நிறைந்து காணப்பட்டது ரொறன்ரோ மாநகரின் மையம். யூலை 4 – 7 வரை நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் 26ஆவது ஆண்டு விழா முன்னெப்போதும் இல்லாத அளவு சிறப்புகளோடு கனடியத் தமிழர் பேரவையால் கனடாவில் முதன் முறையாக நடத்தப்பட்டது. சொனி நடுவத்தில் முக்கிய நிகழ்சிகளும் நோவோரெல் விடுதியில் இணை நிகழ்வுகளும் கிறான் பாக்கசு விருந்து மண்டபத்தில் விருந்தினர் சந்திப்பும் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான அமெரிக்கத் தமிழ் உறவுகளோடு ஆயிரக்கணக்கான கனடியத் தமிழர் இணைந்து இவ் விழாவைச் சிறப்பித்தனர். ஈழத் தமிழருக்கும் தமிழ் நாட்டுத் தமிழருக்கும் ஓர் உறவுப் பாலமாய் அமைந்தது இந்த விழா. முதன் முறையாகக் கனடிய மண்ணிலே தமிழ் நிகழ்வொன்று மாகாண அரசின் ஆதரவோடு நடைபெற்றுள்ளது. மாகாண மற்றும் மாநில அரசின் உறுப்பினர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் பங்கேற்கும் வகையிலும் விழா நிகழ்வுகள் ஏற்பாடாகியிருந்தன. மொழி, மரபு, பண்பாடு, கலை, இலக்கியம், விடுதலை, ஆன்மீகம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய முத்தமிழ் நிகழ்வுகள் சொனி நடுவத்தில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. வணிகம், அரசியல், மருத்துவம், இசை, திரைப்படம், இளையோர் போன்ற பல இணை நிகழ்வுகளும் இரண்டு நாட்கள் இடம்பெற்றன. இறுதிநாள் நிகழ்வாக கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாறல் அமைந்தது.
இளையோரையும் உள்ளூர் ஆற்றலையும் முதன்மைப்படுத்திய இந் நிகழ்வில் புலம்பெயர் தமிழ்க் கலைஞருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது. வெள்ளி மாலை இடம்பெற்ற பிறேம் கோபாலின் வலி சுமந்த மண் நடன நிகழ்ச்சி அனைவரது மனங்களையும் உருக்கியது. தொடர்ந்து இடம்பெற்ற சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகத்தில் நூற்றுக்கணக்கான கனடியத் தமிழ்க் கலைஞர் பங்கேற்றுத் தம் ஆற்றல்களை வெளிப்படுத்தினர். ஈழத்து வில்லுப்பாட்டு மற்றும் இலக்கிய வினாடி வினா என்பனவும் முக்கிய நிகழ்ச்சிகளாய் அமைந்தன. வட அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அமைந்துள்ள தமிழ்ச் சங்கங்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பட்டி மன்றம், கவியரங்கம், நகைச்சுவை, தமிழ்த் திறன் போட்டிகள் என மேடை நிகழ்ச்சிகள் சிறப்பாய் அமைந்தன. இந்தியக் கம்யூனிசக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு சீ மகேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு சிறிதரன் மற்றும் திரு சரவணபவன் ஆகியோர் நேரடியாகவும் தவிர்க்க முடியாத காரணங்களால் நேரில் பங்கேற்கமுடியாது போன திரு இரா சம்பந்தன் அவர்களும் திரு தமிழருவி மணியன் அவர்களும் காணொளி மூலம் சிறப்புரை வழங்கினர்.
இணை நிகழ்வுகளில் ஒன்றான வணிக அரங்கில் வணிகத்திற் சிறந்து விளங்கும் புலம் பெயர் தமிழர் பலர் கலந்து கொண்டு உரையாற்றியதோடு தம் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து இடம்பெற்ற இளந் தொழில் முனைவோர் நிகழ்விலும் இவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இளையோருக்கான சிறப்பு நிகழ்வாக ‘அடையாளம்’ அமைந்தது. தனித்தமிழ்க் கலைஞன் நக்கீரன் கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வு இளையோரைத் தமிழராய்ப் பெருமை கொள்ளச் செய்யும் உந்துதலாய் அமைந்தது. பல துறைசார் வல்லுனர் பங்கேற்ற மருத்துவம், அரசியல், திருமணம் மற்றும் கல்வி சார்ந்த பல இணை அரங்குகளும் கருத்தரங்குகளும் இடம்பெற்றன.
ஈழத்தமிழர் தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவாக அமைந்தது 26ஆவது தமிழ் விழா. அடிகளாரின் வாழ்வையும் பணிகளையும் எடுத்துக்காட்டும் வகையில் கண்காட்சியும் ஆவணக் காணொளியும் இடம்பெற்றது. அடிகளாரின் மறைவின் போது வெளியான நினைவு நூலின் இரண்டாம் பதிப்பு கனடியத் தமிழர் பேரவையால் அவரது நூற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்டது. அறிஞர் பலர் கூடிய கருத்தரங்கும் அடிகளார் பற்றியதாக அமைந்தது. கனடியரான திருமதி பிரெண்டா பெக் அவர்களின் பல்லாண்டு ஆய்வில் உருவான பொன்னிவள நாடு சித்திரக் கதையும் சித்திரக் காணொளியும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
சொனி நடுவத்தின் இறுதி நிகழ்வாக ரொறன்ரோவின் அக்னி இசைக் குழுவோடு இணைந்து மனோ, சாருலதா மணி, சத்தியப்பிரகாசு, பிரகதி, வியித்தா, சாயீசன், சரிகா ஆகியோர் இசை நிகழ்ச்சியை வழங்கினர்.
வேட்டி, சேலை, பாவாடை, தாவணியெனத் தமிழர் மரபு உடைகளில்  ரொறன்ரோவின் மையத்தை வண்ணமயமாக்கி பல்லினத்தவரின் கவனத்தையும் சொனி நடுவத்தின் பக்கம் ஈர்த்தனர் தமிழர். தேசிய மற்றும் பல்லின ஊடகங்களில் முக்கிய செய்தியாய் இடம் பிடித்தது பெற்னா தமிழ் விழா 2013. கலைஞரும் அறிஞரும் பொன்னாடையும் சந்தன மாலையும் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டனர். மீண்டும் இந்த விழா ரொறன்ரோவில் இடம்பெறாதா என்ற ஏக்கத்தை எல்லோர் மனதிலும் உருவாக்கி இனிதே நிறைந்தது நிக