கனடா டொரன்டோவில் நடைபெறவிருக்கும் FeTNA தமிழ் விழா சிறப்புற இடம்பெற பழ.நெடுமாறன் வாழ்த்துக்கள்!

naam tamil vilaவட அமெரிக்க தமிழர் பேரவையின் (FeTNA) 26 வருட சரித்திரத்தில் முதல் முதலாக எதிர்வரும் சுலை 4-7 ம் தேதிகளில் சோனி டடுவத்தில் நடக்கவிருக்கும் தமிழ் விழாவிற்க்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், விழா வெற்றியாக நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எழுதிய செய்தி பின்வருமாறு: அன்பிற்குரிய வட அமெரிக்கா வாழ் தமிழ்ச் சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்புரிமையுடன் கூடிய வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் வரலாற்றில் மிக நெருக்கடியான ஒரு காலக்கட்டத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

உலகில் மூத்த இனம் தமிழினம் என்றும் உலகின் மிக மூத்த மொழி தமிழ் மொழியே என்றும் மறைந்த மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அறுதியிட்டு உறுதியாகக் கூறினார்கள். இன்றைய மொழியியல் வல்லுநர்களும் வரலாற்று அறிஞர்களும் அதையே ஏற்கின்றனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உன்னதமான கொள்கையைச் சங்கச் சான்றோர் வகுத்தளித்தனர். எந்த நாடாக இருந்தாலும் அது என்னுடைய நாடே. எந்த இனமாக இருந்தாலும் அவர்கள் என்னுடைய உறவினர்களே என்ற பரந்த உள்ளம் தமிழருக்கு இருந்தது என்பதை இந்தச் சொற்றொடர் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

சங்கச் செய்யுட்களில் இருநூறுக்கு மேற்பட்ட இடங்களில் உலகம் என்ற சொல்லை நம்முடைய புலவர்கள் கையாண்டுள்ளனர். சிலப்பதிகாரம் முதல் கம்ப இராமாயணம் வரை தோன்றிய முக்கிய இலக்கியங்கள் உலகம் என்றே தொடங்குகின்றன. தமிழன் உலகக் கண்ணோட்டம் உடையவனாகத் திகழ்ந்தான். உலக மக்களை விருப்பு வெறுப்பின்றி நேசித்தான். ஆனால் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்தவோ அந்த மக்களைக் காப்பாற்றவோ உலகம் முன்வரவில்லை.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு எழுப்பிய அவலக்குரலுக்கும் உலகம் செவிசாய்க்கத் தவறியது. இன்னமும் தமிழீழப் பகுதியில் நம்முடைய மக்களின் துயμம் ஓயவில்லை. அவர்களின் விழிகளிலே பெருகும் நீரைத் துடைக்க யாருமில்லை. இந்த மாநாட்டில் கூடியிருக்கக் கூடிய அருமைத் தமிழர்களே! நமக்கு நாமே உதவிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தயவு செய்து உணருங்கள். உலகம் முழுவதும் வாழ்கிற 10 கோடி தமிழர்கள் ஒன்று திரள வேண்டும். நம்முடைய 20 கோடி கரங்களும் இணைந்து உயர்த்தப்பட வேண்டும்.

நமக்குள்ளே உள்ள சிறு சிறு வேறுபாடுகள் எத்தகையவையாக இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளுங்கள். அழிவின் விளிம்பில் ஈழத்தமிழினம் நின்று கதறுவதை எண்ணிப் பாருங்கள். எஞ்சியிருக்கும் அந்தத் தமிழர்களையாவது மீட்பதற்கு நம்மாலான அத்தனையையும் நாம் செய்தாக வேண்டும்.