பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய அமைச்சரவையை அமைத்துள்ளார் கிறிஸ்டி கிளார்க்

பிரிட்டிஷ் கொலம்பியா 22 உறுப்பினர்கள் அடங்கிய தனது புதிய அமைச்சரவையை நேற்று அமைத்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இம்முறை இடம்பெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிறுபான்மை லிபரல் அரசாங்கத்தை முதல்வர் கிறிஸ்டி கிளார்க் அமைத்துள்ளார்.

எனினும் அவர் அமைத்துள்ள இந்த அரசு நிலைக்குமா என்பது இன்னமும் சந்தேகத்திற்கு இடமானதாகவே உள்ள நிலையில், 22 உறுப்பினர்கள் அடங்கிய தனது புதிய அமைச்சரவையை நேற்றைய நாள் அவர் அமைத்துள்ளார்.

அத்துடன் நேற்றைய இந்த நிகழ்வில் தமது இந்த அரசு மிகக் குறுகிய கால அரசாகவே இருக்கக்கூடும் என்பதனையும் குறிப்பிட்டே அவர் நியமனத்தினை வழங்கியுள்ளார்.

அத்துடன் இந்த மாத இறுதியில் தமது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படக் கூடும் எனவும், அதன்போது தமது ஆட்சி கலைக்கப்படக்கூடும் என்பதனையும், இந்த அமைச்சரவைப் பதவியேற்பின் போது புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் கிறிஸ்டி கிளார்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய இந்த பதவி ஏற்பு நிகழ்வானது மாநில ஆளுநர் நாயகத்தின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதவி ஏற்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதல்வர் கிறிஸ்டி கிளார்க், தற்போது தாம் மாநில ஆட்சியின் காப்பாளர்கள் என்ற நிலையினையே தக்கவைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனால் தாம் எந்தவித புதிய கொள்கை மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை எனவும், எனினும் சட்டமன்றில் தமக்கு என்று கடமைகளும் கடப்பாடுகளும் உள்ள நிலையில், மன்றில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களாக தமக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பிய சட்டன்றம் எதிர்வரும் 22ஆம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது புதிய ஜனநாயக கட்சியும், பசுமைக் கட்சியும் இணைந்து சிறுபான்மை லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தினை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை இடம்பெற்ற பிரிட்டிஷ் கொலம்பியா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக உள்ள 87 ஆசனங்களில் 43 ஆசனங்களை மட்டுமே லிபரல் கட்சி கைப்பற்றியது.

அதேவேளை புதிய ஜனநாயக கட்சி 41 ஆசனங்களை கைப்பற்றி லிபரலுக்கு சவால் விடுக்கும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆனால் முதல் முறையாக அந்த மாநிலத்தில் 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட பசுமைக் கட்சியே, யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மாணிக்கும் வலுவான சக்தியாக உருமாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பசுமைக் கட்சி ஏனைய இரு கட்சிகளுடனும் பேச்சுக்களை நடாத்திய நிலையில், இறுதியாக புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து 44 ஆசனங்களுடன் ஆட்சியை அமைப்பதற்கான முனைப்பினை அந்த இரண்டு கட்சிகளும் முன்னெடுத்திருந்தன.

எனினும் சில நாட்களின் முன்னர் திடீரென லிபரல் கட்சியே அந்த மாநிலத்தில் சிறுபான்மை லிபரல் அரசாங்கத்தை அமைத்து ஒரு வகையான வியப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.