சந்தேகத்திற்கிடமான வகையில் தீக்கு இரையான பேக்கரி

Vaughan பகுதியில் உள்ள பேக்கரி ஒன்று இன்று அதிகாலையில் தீக்கிரையாகியுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பட்டர்மில் அவனியூ பகுதியில் அமைந்துள்ள இந்த பேக்கரியில் அதிகாலை 1.30 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், வேகமான பரவிய அந்த தீ அந்த பேக்கரிக்கு மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தீப்பரவல் ஏற்பட்ட வேளையில் அந்த கட்டிடத்தினுள் யாரும் இருக்கவில்லை என்றும், அதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த தீப்பரவல் சம்பவம் சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதாக கூறியுள்ள அதிகாரிகள், இது தொடர்பில் மேலதிகமான துல்லிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ தீயணைப்பு துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.