மாற்றமடையும் அரசியல் தளம்! மஹிந்த சொல்லும் புதுக்கதை

இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட காரணிகளுக்கு இணங்கமுடியாததன் காரணமாகவே தனது அரசு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கைவிடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு தனது ஆட்சியின்போது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை நியாயப்படுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஐரோப்பிய சந்தையை வரிகளற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கின்ற போதிலும் அதற்காக அந்த நாடுகள் விலை செலுத்த வேண்டியுள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்காக குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அதனால் நாட்டின் அரசியல் சட்ட ஸ்தாபன கட்டமைப்புக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

இதன் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கைகளான எமது இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள், அதிகளவு அதிகாரப்பகிர்வு போன்றவற்றிற்கு இணங்காமல் எனது அரசு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கைவிட்டது.

2010 இல் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழந்த பின்னர் நாட்டின் ஏற்றுமதிகளுக்கு சலுகை அடிப்படையிலான வரி விதிக்கப்பட்டது.

கடந்த மாதம் இலங்கைக்கு மீண்டும் வரிச்சலுகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மீன்பிடித் தொழில்துறை ஆடை தொழில்துறை உட்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும் என அரசு தெரிவித்தது.

ஐரோப்பிய சந்தைக்கான வரிச்சலுகையற்ற ஏற்றுமதியை பயன்படுத்துவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முயல்வார்கள் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வரிச்சலுகையை அடிப்படையாக வைத்து எங்கள் எதிர்காலம் முழுவதையும் கட்டியெழுப்ப முடியும் என அரசு மக்களுக்குத் தெரிவித்து வருகின்றது. எனினும், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தற்காலிக நன்மைகளையே கொடுக்கும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

நாடொன்று குறைந்த நடுத்தர வருமானம் உள்ளதாகக் காணப்படும் வரையே இந்த வரிச்சலுகையிலிருந்து நன்மைகளைப் பெறமுடியும். உயர் மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகள் இந்த வரிச்சலுகையைப் பெறமுடியாது. இலங்கை அந்த நிலையை அடைந்த பின்னர் இரண்டு வருடகாலத்துக்கு எங்களைக் கண்காணிப்பார்கள். பின்னர் ஒரு வருடகால அவகாசத்தை வழங்கிய பின்னர் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எங்களிடமிருந்து பெறப்படும்.

இலங்கை உயர் மற்றும் நடுத்தர வருமான நாடு என்ற அந்தஸ்துக்கு அருகில் உள்ளதால் நாங்கள் ஜி.எஸ்.பி. பிளஸ் இல்லாத நிலைக்கு எங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசு குறிப்பிட்ட வரிச்சலுகை குறித்து உண்மைக்கு மாறான சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மக்கள் மீது திணிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.