விசாரணைக்குழுவின் பாலியல் குற்றச்சாட்டு – கிளிநொச்சி பொது அமைப்புகள் முதல்வருக்கு கண்டனக் கடிதம்!

கிளிநொச்சி பாரதிபுரம் பாடசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மாணவி ஒருவர், பாடசாலை அதிபரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, அபாண்டமானது, அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என பிரதேசத்தைச் சேர்ந்த பதினொரு பொது அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

அத்தோடு பாரதிபுரம் பாடசாலையில் அக்காலப்பகுதியில் விசாரணைகுழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் போன்று எவையும் இடம்பெறவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பதுடன் உண்மைக்குப்புறம்பானவை எனவும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் செயலாளர்கள் கையொப்பம் இட்டும் கடிதம் ஒன்றினையும் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் பொது அமைப்புக்கள் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

தங்களால் வடக்கு மாகாண சபை அமைச்சர்களின் செயற்பாடுகளை ஆராய நியமிக்கப்பட்டிருந்த விசாரணைக்குழு அறிக்கை கிளி. பாரதி வித்தியாலய முன்னாள அதிபர் பெ. கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்னாள் ஆசிரியர் ஒருவரால் முன்வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் குற்றசாட்டை கிளி. பாரதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் எமது பிள்ளைகளின் சார்பாக அவர்களின் பெற்றோர்கள் சார்பாக கிராம மட்ட அமைப்புகளாகிய நாங்கள் வன்மையாக மறுக்கின்றோம். பொய்யான இக்குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

குறித்த ஆசிரியை தனது பணிக்காலத்தின் போது முன்பிருந்த ஒய்வுப்பெற்ற அதிபரின் துண்டுதலால் பாடசாலை செயற்பாடுகளுக்கு இடையூறு செய்ததோடு, பாடசாலை நிர்வாகத்திற்கு இடையூறு விளைவித்தமையினாலும் சட்டத்திட்டங்களை உதாசீனம் செய்தமையினாலும் இவரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யுமாறு வலயக் கல்விப் பணிப்பாளாரிடம் பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இதன் காரணமாக அவர் இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் நிமிர்த்தம் கோபமடைந்து பழிவாங்க எண்ணிய குறித்த ஆசிரியை அதிபருக்கு எதிராகவும் பாடசாலைக்கு எதிராகவும் செயற்பட எண்ணி பொய்யான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றமையை நாங்கள் தற்போது மூன்று வருடங்களின் பின் இவ்வறிக்கையின் ஊடாக அறிய முடிகிறது.

இவ்வாறான ஒரு சம்பவம் இப் பாடசாலையில் நடந்திருந்தால் கிராம மட்ட அமைப்புகள் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுத்திருப்போம் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்தோடு தனி நபர்கள் மீதும் குறித்த சமூகத்தின் மீதும் இவ்வாறு அவதூறு பரப்புவது அடிப்படை மனித உரிமை மீறநல் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

எனவே எமது பாடசாலையில் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டது என்ற அபாண்டமான குற்றாச்சாட்டு விசாரணைக்குழுவின் அறிக்கையின் படி ஊடகங்களில் செய்திகளாக வெளியிடப்பட்டது. இது எமது முன்னாள் அதிபரையும், எமது சமூகத்தையும், மிகவும் அவமானப்படுத்தியுள்ளது. எமக்கு வேதனையை அளிக்கிறது எனவே இவ்வறிக்கை முடிவுகள் குறித்து எமது கண்டனத்தையும் அதிருப்தியையும் இத்தால் தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் பாரதிபுரம் வடக்கு,தெற்கு.மத்தி கிராம அபிவிருத்திச் சங்கங்கள்,பாரதிபுரம் சனசமூக நிலையம், மலையாளபுரம் தெற்கு, வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கிருஸ்ணபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம். விவேகானந்தநகர் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கம், மலையாளபுரம் வடக்கு திருவள்ளுவர் சனசமூக நிலையம், மலையாளபுரம் வரசித்தி விநாயனர் ஆலய பரிபாலனசபை, கிருஸ்ணபாரதி முத்துமாரியம்மன் ஆலய பரிபாலனசபை, ஆகிய கிராம மட்ட பொது அமைப்புகள் ஒப்பம் இட்டு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.