அதிகாலையில் இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர்.

நோர்த் யோர்க் குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஃபின்ஞ் மற்றும் இஸ்லிங்டன் அவனியூ ஆகியவற்றிற்கு அருகில் உள்ள Blue Haven Crescent இல் அதிகாலை 2:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், குறித்த அந்த நபர் வாகனத்தினுள் வைத்து அல்லது அதன் அருகில் வைத்து சுடப்பட்டிருக்கலாம் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மனிதக் கொலை தொடர்பான விசாரணைப் பிரிவினர் இதன்போது சுமார் 6 தொடக்கம் 7 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இதேவைளை இன்று அதிகாலை 2.30 மணியளவில் Duncan street மற்றும் Pearl street பகுதியில் அமைந்துள்ள இரவுக் கேளிக்கை விடுதி ஒன்றிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் ஆண் நபர் ஒருவருக்கு காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மோசமான காயத்திற்கு ஆளான போதிலும் அவருக்கு உயிராபத்தில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடாபில் விசாரணைகளில் ஈடுபட்டு வரும் காவல்த்துறையினர் இரண்டு சந்தேக நபர்களைத் தேடி வருவதாக தெரிவித்துள்ள போதிலும், சந்தேக நபர்களின் அடையாளங்களை அவர்கள் வெளியிடவில்லை.