ரொரன்ரோவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் விபத்தில் பலி

ரொரன்ரோவைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

Innisfil இல் Shore Acres Drive ற்கும் Line 14ற்கும் இடைப்பட்ட பகுதியில், நேற்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், வாகனம் ஒன்றின் பக்கவாட்டில் இன்னொரு வாகனம் மோதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களில் ஒன்று அருகே இருந்த கம்பம் ஒன்றுடனும் மோதுண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குறித்த சிறுவன் உள்ளிட்ட நான்குபேர் காயமடைந்த நிலையில், உடனடியாகவே அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களுள் குறித்த சிறுவனும், அவருடன் சென்ற பெரியவர்கள் இருவரும் ஒரு வாகனத்தில் பயணித்திருந்த அதேவேளை, காயமடைந்த மற்றைய நபர் விபத்தில் சம்பந்தப்பட்ட மற்றைய வாகனத்தின் சாரதி என்றும் கூறப்படுகிறது.