இன முறுகலை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில், விரோதங்கள் ஏற்படும் வகையிலான செயல்களில் ஈடுபட சட்டத்தில் இடமளிக்கப்பட மாட்டது எனவும் 2007 இலக்கம் 56 சிவில் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஏப்பிரல் மாதம் நாடு முழுவதும் இனங்களுக்கு இடையில் விரோதங்களை ஏற்படுத்தும் வகையில் 16 பிரதான சம்பவங்கள் நடந்துள்ளன.

இவற்றுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன. நுகேகொடை பிரதேசத்தில் கடை தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாட்டு ரீதியான உறுப்பினர். சந்தேக நபர் கலகொட அத்தே ஞானசார தேரருடன் நெருங்கி செயற்பட்டு வருபவர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பொதுபல சேனா அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.

இது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தரவின் கண்காணிப்பின் கீழ் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் விரோதம் ஏற்படும் வகையில் செயற்படும் குழுக்களை பொலிஸார் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

அடிப்படைவாத குழுக்களுக்கு சட்டத்தை சீர்குலைக்க இடமளிக்க முடியாது. அவற்றுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.