விரைவில் கைதாவார் கோத்தா!

பல்வேறு கொலை சம்பவங்களுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக தொடர்புபட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றுக்கான சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களுக்கு அமைய கோத்தபாய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் குற்ற புலனாய்வு பிரிவு நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டது. இந்த சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மேஜர் உட்பட அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கோத்தபாய ராஜபக்ச குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். கடந்த 5ஆம் திகதி 4 மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் கோத்தபாய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மீண்டும் அடுத்த வாரம் கோத்தபாய விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உட்பட பல கொலைகள் தொடர்பில் சூழ்ச்சி செய்த குற்றச்சாட்டின் கீழ் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்ற விசாரணை திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதில் குறிப்பாக வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட கொலை மற்றும் குடிநீர் கோரி சமாதான ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ரத்துபஸ்வெல மக்களுக்கு எதிராக இராணுவத்தை ஈடுபடுத்தி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் என்பன கோத்தபாயவின் நேரடி தலையீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குற்ற புலனாய்வு பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.