பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொலைந்த விமானம் – தேடுதல் தீவிரம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் விமானம் ஒன்று காணாமல் போயுள்ள நிலையில், அதனை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கம்லூப்ஸ் பகுதிக்கு சென்று சேரவேண்டிய அந்த சிறியரக விமானம், உரிய நேரத்தில் அங்கு சென்றுசேரத் தவறியதை அடுத்து, அது காணாமல் போன விடயம் தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து தேடுதல் மீட்பு சிறப்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வழிகளிலும் தேடுதல் நடவடி்ககைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கிரேன்புரூக் பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய அந்த விமானம், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின்னர், வியாழக்கிழமை பிற்பகலில் இருந்து அதனுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக, கூட்டு தேடுதல் மீட்பு நடவடிக்கை பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த அந்த விமானம் அடிப்படையில் அல்பேர்ட்டாவின் லேர்த்பிரிட்ஜ் பகுதியில் இருந்தே புறப்பட்டு வந்ததாகவும், அதில் இருவர் இருந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாகவும் கூட்டு தேடுதல் மீட்பு நடவடிக்கை பணியகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அந்த விமானத்தினைச் செலுத்திச் சென்றவர் 21 வயது அலெக்ஸ் சைமன் எனவும், அவருடன் சென்ற மற்றையவர் 24 வயது சிட்னி றொபில்லர்ட் எனவும், இருவரும் கம்லூப்ஸ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியிட்டுள்ள கனேடிய மத்திய காவல்த்துறையினர், இருவரது குடும்பத்தாருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமையே ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடி்ககைகள் நேற்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்த நிலையில், இரவு வேளைகளில் நிறுத்தப்பட்டு, இன்று பகலும் தேடுதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.