வளைகுடாவில் பாரிய நெருக்கடி! மஹிந்தவின் கோட்டையில் ஏற்படும் திடீர் மாற்றம்

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலங்கைக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிராந்தியத்திலுள்ள ஐந்து நாடுகள் கட்டாருடான ராஜதந்திர உறவுகளை நிறுத்தியுள்ளன. இதன்காரணமாக கட்டார் அரசாங்கம் பல்வேறு நெருக்கடி முகங்கொடுத்துள்ளது.

இதில் பிரதானமாக கட்டார் நாட்டுக்கு சொந்தமான விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கட்டார் எயார்வேஸ் உட்பட பல விமான சேவை நிறுவனங்கள், விமான பயணங்களை இரத்து செய்துள்ளமையினால் பல விமானங்கள் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை இலங்கை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போயிங் நிறுவனத்தின் முன்னாள் பொறியியலாளரான திலக் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மத்தல விமான நிலையம் வெள்ளை யானை என அழைக்கப்பட்டது. எனினும் கட்டார் நெருக்கடியை அடுத்து, மத்தல விமான நிலையத்தை விமான கேந்திர நிலையமாக மாற்ற வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தை கட்டார் அரசாங்கத்திற்கு சொந்தமான விமானங்களின் மத்திய நிலையமாக மாற்றிக் கொண்டால், அதன் ஊடாக இலங்கைக்கு பெருமளவு வருவாய் கிடைக்கும் என திலக் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தி, கட்டார் அரசாங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அதற்காக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டார் செல்வமிக்க நாடு என்பதால், இவ்வாறான சேவையை இலங்கை வழங்குவதன் மூலம் பெருமளவு லாபத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மத்தல சர்வதேச விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. இதற்காக சீனா பல பில்லியன் டொலர்களை கடனுதவியாக வழங்கி இருந்தது.

எனினும் எதிர்பார்த்த அளவு விமான நிலையத்தின் ஊடாக வருவாய் கிடைக்கவில்லை. விமான நிலையம் அமைந்துள்ள அமைவிடம் இதற்கு பிரதான காரணமாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான ஹம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், மத்தல விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

எனினும் மத்தல விமான நிலையத்தில் தமது சேவைகளை முன்னெடுக்க உலகின் முன்னணி விமான சேவை நிறுவனங்கள் முன்வரவில்லை.

இந்நிலையில் கட்டார் நெருக்கடியை அடுத்து மத்தல விமான நிலையத்தை பிரபல்யப்படுத்தினால், எதிர்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இணையாக மாற்ற முடியும் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.