தாயகத்தின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழீழத் தாயகத்தில் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள தமது நிலங்களை மீளத்தருமாறும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மைநிலையினை அறிந்து கொள்ளவும் மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் முகமாக நாடு புலம்பெயர் தேசங்களில் நாடு கடந்து தமிழீழ அரசாங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் தாயகத்தில் இடம் பெறும் தொடர்ச்சியான அறவழிப் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம் பெயர் நாடுகளில் போராட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இத் தீர்மானத்துக்கு அமையவே 12.06.2017 திங்கட் கிழமையன்று முதற்கட்டமான அடையாளக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இப் போராட்டங்களில் புலம் பெயர் தமிழ் மக்களும் நீதிக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக சமூக மக்களும் பெருந் தொகையில் பங்கு கொள்வது அனைத்துலக சமூகத்தின் கவனத்தை எமது தாயக உறவுகள் நோக்கி ஈர்க்க உதவும்.

மேலும் தமக்கு ஆதரவாக புலம் பெயர் நாடுகளிலும் தமது உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் எனும் செய்தி தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் எமது மக்களுக்கு உற்சாகத்தை வழங்கக் கூடியது என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.