G7மாநாடு நடாத்தும் வாய்ப்பு கனடாவிற்கு சிறந்த சந்தர்ப்பம் – பிரதமர் ரூடோ

G7 மாநாட்டை அடுத்த ஆண்டு கனடாவில் நடாத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தமையை ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான G7 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள கியூபெக் மாநிலத்தின் “லா மல்பாயி” நருக்கு பிரதமர் ஜஸ்டின் ரூடோ வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டிருந்தார்.

அங்கு மாநாடு நடாத்தப்பட உள்ள பகுதிகளைப் நேரில் பார்வையிட்ட அவர், பின்னர் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடாத்துவதற்கு கனடாவிற்கு மீண்டும் கிடைத்துள்ள இந்த வாய்ப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ளனார்.

இது தமக்கு கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பம் என்றும், அதன்மூலம் நாட்டுக்கு மிக முக்கியமான விடயங்களை முன்னோக்கி நகர்த்த முடியும் எனவும் கருத்துக் கூறியுள்ளார்.

இதனால் 2018ஆம் ஆண்டு உலக நாடுகளின் பார்வை இந்த உச்சி மாநாடு நடாத்தப்படும் இடத்தை நோக்கி குவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாநாடு இடம்பெறவுள்ள அந்த இடம் மிகவும் சிறப்பான இடம் என்றும், அனைத்துலக நாடுகளின் தலைவர்களை வரவேற்பதற்கு மிகவும் சிறந்த இடமாகாவே அது இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான G7 மாநாட்டினை ஏற்று நடாத்தும் நாடு என்ற வகையில், கனடா தனது நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக இது அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.