கனேடிய பாதுகாப்பு கொள்கை மேம்பாட்டுத் திட்டத்தினை வெளியிட்டது லிபரல் அரசாங்கம்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த கனடாவின் பாதுகாப்பு கொள்கை தொடர்பான மேம்பாட்டுத் திட்டம் ஒட்டாவாவில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை பெருமளவான இராணுவ பிரதானிகள் மத்தியில் பாதுகாப்பு கொள்கை மீளாய்வு அறிக்கையாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் வெளியிட்டு வைத்துள்ளார்.

இந்த புதிய திட்டத்தில் இராணுவத்துக்கான பல்வேறு புதிய ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கனேடிய இராணுவத்துக்காக மேலும் 62 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு இந்தத் தொகை இராணுவத்துக்காக செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இராணுவத்துக்கு புதிதாக 5,000 பேரை இணைத்துக் கொள்வது, இராணுவத்துக்கான புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தல், இணையத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் அதி நவீன யுத்திகளை ஏற்படுத்திக் கொள்வது, ஆயுதம் தாங்கிய ஆளில்லா தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான விபரங்களும் இந்த மதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையை வெளியிட்டு வைத்த கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான், உலக அளவில் நிலையற்ற தன்மை அதிகரித்துவதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த நிலையில் இராணுவத்தினரால் நாட்டை உரிய முறையில் பாதுகாக்க முடியும் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில், கனேடிய இராணுவத்தில் பாரிய விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி பயன்படும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் தற்போது உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் சம்பவங்களை நோக்குகையில், இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது இன்றியமையாத ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இராணுவத்துக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இந்த 62 பில்லியன் டொலர்கள் நிதியை எங்கிருந்து பெற்றுக்கொள்வது, அதாவது ஏனைய துறைகளுக்கான நிதிமூலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படுமா அல்லது, வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக பற்றாக்குறை நிலையினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ளப்படுமா என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் எதனையும் வெளியிடவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

அத்துடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிதியின் பெரும் பங்கு, எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் கூறப்படுகிறது.