150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் :இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானவர்களை எதிர்பார்க்கும் கல்கரி

கல்கரியில் முன்னெடுக்கப்படவுள்ள கனடாவின் 150 பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கரியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 30 நிமிட வான வேடிக்கை, சிறப்பு ஒளிக்கீற்று காட்சிகள், பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள், பண்பாட்டு கண்காட்சி நிகழ்வுகள், பிரமாண்ட உணவுப் பந்தல்கள், பல்சுவை கலை நிகழ்வுகள் என்று பெருமளவான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் யூலை முதலாம் நாள் “கனடா டே” அன்று, ஃபோர்ட் கல்கரியில் வெள்ளை மற்றும் சிவப்பு சட்டைகளுடன் கூடவுள்ள சுமார் 4,000 பேர், மனிதர்களால் ஆன பிரமாண்ட கனேடிய கொடியினை அமைக்கவுள்ளனர்.

இவை தவிர சைனா டவுன், ஈஸ்ட் விலேஜ், பிறின்ஸ் ஐலன்ட் பார்க், ஒலிம்பிக் பிளாசா என்று பல்வேறு இடங்களிலும், தனித்தனியே பிரமாண்டமான பல்வேறு நிகழ்வுகளும், வான வேடிக்கைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கல்கரிக் கொண்டாட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட கல்கரி நகரபிதா நஹீட் நென்ஷி, அன்றைய நாளுக்காக ஒவ்வொரு நாட்களையும் எண்ணியவாறு தாம் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எண்ணிலடங்கா நிகழ்வுகள் கல்கரியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.