150ஆவது பிறந்தநாள் – ஒட்டாவாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கனடா அதன் 150ஆவது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடுகின்றது. இதற்காக நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், முதன்மை நிகழ்வுகளை தலைநகர் ஒட்டாவாவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஒட்டாவா நகரபிதா, கனடாவின் 150ஆவது பிறந்தநாளின் முதன்மை நிகழ்வுகளை ஏற்று நடாத்தும் நகரம் என்ற வகையில்,அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சாத்தியமான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனைத்துவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எனினும் எவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் நூறு சதவீதமான பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்க முடியாது என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் இலண்டன் நகரில் கடந்த சனிக்கிழமை பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ள ஒட்டாவா நகரபிதா, இலண்டனில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களையும் அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு ஆய்வுகள், முன்னேற்பாடுகள், தடுப்பு முறைகள் என்பன செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

அந்த வகையில் கனடாவின் 150ஆவது பிறந்தநாள் முதன்மை நிகழ்வுகள் இடம்பெறவுள்ள ஒட்டாவா நகரின் பல்வேறு பகுதிகளிலும், யூலை மாதம் முதலாம் திகதி பாதுகாப்பு ஏற்பாடுகளும், காவல்த்துறையினரின் வலுவான பிரசன்னமும் அதிகமான இருப்பதை வெளிப்படையாகவே காணமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.