ஒன்ராறியோ ஏரியில் சடலம் மீட்பு

ஒன்ராறியோ ஏரியில் சனிக்கிழமை மாலையிலிருந்து காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த படகோட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

லோயலிஸ்ட் பிராந்தியப் பகுதியில், ஒன்ராறியோ ஏரியின் ஆம்ஹேர்ஸ்ட் ஐலன்ட் இற்கும் கிரேப் ஐலன்ட் இற்கும் இடைப்பட்ட பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்துபோனதாக சனிக்கிழமை மாலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து ஒன்ராறியோ மாநில காவல்த்துறையினரும் உள்ளூர் அவசர மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர்.

ஏரியினுள் கவிழ்ந்த அந்த படகில் இரண்டு பேர் இருந்த நிலையில், ஒருவர் மட்டும் ஒருவாறு கரை சேர்ந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் காணாமல் போன இரண்டாமவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ஆம்ஹேர்ஸ்ட் ஐலன்ட்ற்கு அருகே நேற்று அவர் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மரண விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், மீட்கப்பட்ட சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளை நாளை செவ்வாய்க்கிழமை ஒட்டாவா மருத்துவமனையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.