ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறப்புத் தூதராக ஸ்டீஃபான் டியோன் : எதிர்கட்சிகள் அதிருப்தி

ஸ்டீஃபான் டியோன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான கனடாவின் சிறப்புத் தூதராக நியமிக்க்பபட்டுள்ள நிலையில், அவரின் அந்த நியமனம் தொடர்பில் எதி்ர்க்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

ஜஸ்டின் ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் முதலில் கனடாவின் வெளிவிவகார அமைச்சராக ஸ்டீஃபான் டியோன் நியமிக்கப்பட்டார்.

பின்னர் அவரின் அமைச்சுப் பதவி கிரிஸ்டியா ஃபிரிலாட்ரிற்கு மாற்றி வழங்கப்பட்டதுடன், ஸ்டீஃபான் டியோன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யேர்மனிக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது அவரை ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறப்புத் தூதராகவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ நியமித்துள்ளதை அடுத்து, அவரின் இந்த இரட்டை நியமனம் தொடர்பில் எதிர்கட்சியினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஸ்டீஃபான் டியோன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டு மூன்று மாதத்தின் பின்னர், வழக்கத்துக்கு மாறான இரட்டை நியமனமாக அவருக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறப்புத் தூதர் பொறுப்பினையும் பிரதமர் அறிவித்துள்ள நிலையில் இந்த நியமனமானது வெளியுறவு விவகாரங்களில் மிக மோசமான விரக்தி நிலையை ஏற்படுத்தியுள்ளதாக பழமைவாதக் கட்சியின் வெளிவிவகார விமர்சகர் பீட்டர் கென்ட் தெரிவித்துள்ளார்.

புதிய சனநாயக கட்சியின் வெளிவிவகார விமர்சகர் ஹெலேனா லவர்டியர் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், இரண்டு வாரங்களின் முன்னர் மேற்கொண்ட யேர்மனி பயணத்தின் போது, ஸ்டீஃபான் டியோனின் இந்த நியமனம் தொடர்பில் தாம் பல முறைப்பாடுகளை கேள்விப்பட்டதாக தெரிவித்துள்ளார்.