கனேடிய றோயல் வங்கி கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றம்

கனேடிய றோயல் வங்கி கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

King Street Westஇல், Bay street மற்றும் Yonge street ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் குறித்த வங்கி அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று மாலை 5 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது.

உயர் மின் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டதுடன், அங்கிருந்து பெரும் திரளாக கரும்புகை வெளியேறிய நிலையில், உடனடியகாவே அந்த கட்டத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதன் காரணமாக நேற்று இரவு King Street West ஊடான போக்குவரத்துகளும் முற்றாக தடை செய்யப்பட்டன.

குறித்த அந்த கட்டிடத்தின் நிலக்கீழ் அறைப் பகுதியில் வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டதனை அடுத்தே இந்த தீப்பரவல் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படும் நிலையில், மின்சார விபத்து ஒன்றே இந்த தீப்பரவலுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிலக்கீழ் அறைப் பகுதியில் பல மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான நிலையில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் ரொரன்ரோ ஹைட்ரோவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதைக்கு அந்த பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தவிர்க்குமாறும், அங்கிருந்து வெளியேறும் புகையை சுவாசிக்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.