பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

uthayaஉள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தேர்தல்களை தொடர்ந்தும் காலதாமதப்படுத்துவதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சி அறிவித்துள்ளது.

கூட்டு எதிர்கட்சியின் பங்காளிக் கட்சியான பிவித்துரு ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில,

“தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக்க பீரிஸ் எல்லை நிர்ணய அறிக்கையினை துரிதமாக கையளிப்பதற்கான உதவிகளை அமைச்சர் பைஸர் முஸ்தபா தமக்கு வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கையை தயாரிக்கும் செயற்பாடுகளை தொடர்ந்தும் காலதாமதப்படுத்தும் நோக்கில் செயற்பாடு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்ததாக கூறியிருந்தார்.

அறிக்கையை துரிதகதியில் வழங்க தமக்கு அமைச்சின் உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அதனால் அமைச்சர் தனது பொறுப்பிலிருந்து முறையாக செயற்படவும் இல்லை. எல்லை நிர்ணயக் குழுவின் சுயாதீனமான செயற்பாட்டிற்கு இடமளிக்கவும் இல்லை. அதனால் அமைச்சர் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பறித்த அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு இராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவோம்” – என்றார்.