நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் அவர்களின் மாவீரர் நாள் செய்தி

tgte-ruthrakumarநவம்பர் 27, 2016

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும்! அதற்கென உழைப்பதையே மாவீரர்கள் கனவை நனவாக்கும் எமது அறமாக ஏற்கும் உறுதி எடுப்போம்!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தம் உயிரை ஆகுதியாக்கிய நமது மாவீரர்களை நாம் எமது இதயக்கோவிலில் வைத்துப் பூசிக்கும் நாள்.

மாவீரர்கள் நமது மக்களின் விடுதலைக்காய் களமாடினார்கள். நெருப்பாற்றைத் தாண்டினார்கள். புயலை வாயால் ஊதிக் கடந்தார்கள். காற்றுப் போகமுடியா வெளியில் கூடப் புகுந்து பகை அழித்தார்கள்.

அவர்கள் மண்ணில் வீழும் போதெல்லாம் நமது மண்ணின் விடுதலைக்காய் வித்தாய் வீழ்ந்து போவதாகவே எண்ணிக் கொண்டார்கள். தமிழீழ தேசம் தனது விடுதலைக்காய் இறுதிவரை போராடும் என்பதே மாவீரர்களின் இறுதிமூச்சின் நினைவாக இருந்தது.

மாவீரர்கள் ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆள்வதில் என்ன தவறு என்ற பழம் பெருமையினை மீட்டெடுக்கும் நோக்குடன் ஆயுதம் தரித்தவர்கள் அல்ல. மேடைகளில் வீரவசனம் பேசும் அரசியலை நடத்தியவர்களும் அல்ல.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பில் இருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாத்து எமது கௌரவமான இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவே மாவீரர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

எவ்வித தேசிய சமூக ஒடுக்குமுறைகளுக்கும் அப்பாற்பட்டு அதியுயர் சமூகநீதி நிலவும் தேசம் ஒன்றினைப் படைக்க வேண்டும் என்ற இலட்சிய உறுதியின்பாற்பட்டே போராட்டத்தீயில் அவர்கள் குதித்தார்கள்.

மாவீரர்கள் ஆயுதங்கள் மீது கொண்ட காதலால் கருவி ஏந்தியவர்களுமல்ல. இவர்களின் போராட்டப்பாதையினை எதிரியின் ஆயத வன்முறைதான் நிர்ணயம் செய்தது.

தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டங்களும் எதிர்ப்பும் ஆயுதமுனையில் நசுக்கப்பட்டபோது அதன் தர்க்கரீதியான எதிர்வினையாகவே இவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வந்தது.

சிங்கள தேசத்தின் தலைவர்கள் பௌத்த சமயக் கோட்பாடுகளின் பாற்பட்டு உண்மையாக நடந்திருப்பார்களேயாயின் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய அவசியம் எமது மாவீரர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

மாவீரர்களின் போராட்டமே தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு அனைத்துலக கவனத்தைப் பெற்றுத் தந்தது. தமிழ் மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் மாவீரர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். அவர்களது நினைவுகள் தமிழ் மக்களின் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும். இந்த நினைவு எமது சுதந்திர வேட்கையைச் சுமந்து நிற்கும்.

அன்பான மக்களே!

நாம் இன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு காலகட்டத்தில் நிற்கிறோம். மாவீரர்களின் கனவு சுமந்து சுதந்திர வாழ்வுக்காகத் தொடர்ந்து போராடுவதா அல்லது சிங்களப் பேரினவாதத்தின் மேலாண்மையினை ஏற்று அடிமைவாழ்வில் சிறுமைப்பட்டுப் போவதா என்பதைத் தமிழ் மக்கள் முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் இது.

நல்லாட்சி என்ற பெயரிலும் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான அரசியல்தீர்வு என்ற போர்வையிலும் மாயமான்கள் எம் முன்னால்; உலவி வரும் காலம் இது. வெளித்தோற்றத்தில் காட்டப்படும் மினுமினுப்பையும் பளபளப்பையும் கண்டு ஏமாறாது தமிழீழ மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது.

நமது தலைவர்கள் தமது இயலாமை காரணமாகவோ அல்லது அறியாமை காரணமாகவோ அல்லது தம்மை யதார்த்தவாதிகள் என்று கருதிக் கொள்ளும் நிலை காரணமாகவோ அல்லது சொந்தநலன்கள் காரணமாகவோ இந்த மாயமான்களை தமிழ்மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியினைத் தொடர்ந்தும் மேற்கொள்ளாத வகையில் தமிழ் மக்கள் அதனைத் தடுத்த நிறுத்த வேண்டும். நமது மாவீரர்களின் பெயரால் நாம் அதனைச் செய்துதான் ஆக வேண்டும்.

தற்போதய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியினை நல்லாட்சி என அழைத்துக் கொள்கின்றனர். முன்னைய குடும்ப ஆட்சியின் அதிகார மையத்தை ஆட்டம் காணச் செய்தமையின் மூலம் ஆட்சிமாற்றம் சிங்கள மக்களுக்குச் சில நன்மைகளை வழங்கியிருக்கக்கூடும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இவ் ஆட்சியினை நல்லாட்சி என எவ்வாறு உணர முடியும்? தமிழ்மக்களுக்கு எதிரான இனஅழிப்பை புரிந்தவர்களும் இனஅழிப்புக் குற்றவாளிகளும் நிறைந்தவொரு ஆட்சியே இது.

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப்படையினரைத் தமிழர் தாயகபூமியில் இருந்து அகற்ற மறுக்கும் ஆட்சியே இது.

அரசியற் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகளை விடுதலை செய்வதற்கு எவ்வித தயவுதாட்சணியமுமின்றி மறுத்துக்கொண்டிருக்கும் ஆட்சியே இது.

இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதாகக் கூறிய தமிழர் காணிகளை முழுமையாக விடுவிக்காது இழுத்தடிக்கும் ஆட்சியே இது.

பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லும் ஆட்சியே இது.

இனவெறுப்பினை உமிழும் புத்தபிக்குகள் சட்டநடவடிக்கை எதுவுமின்றி சுதந்திரமாக உலவ இடம் தரும் ஆட்சி;யே இது. இத்தகை ஆட்சியை எவ்வாறு நாம் நல்லாட்சியெனக் கொள்ள முடியும்?

முன்னைய மகிந்த இராஜபக்ச ஆட்சியின் கொடூரம் காரணமாகவே தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு ஆதரவு வழங்கினர். ஆனால் இப்புதிய ஆட்சியினை நல்லாட்சி என அங்கீகரிப்பதற்குத் தமிழ் மக்கள் தயாராக இல்லையென்பதே உண்மை.

இந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்ல சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியில் சிக்குண்டு இறுகிப் போய் இருக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் எவராலும் தமிழ் மக்களுக்கு நல்லாட்சியினை வழங்க முடியாது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழ் இனத்தை ஒரு தேசமாக அங்கீகரித்து, இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களை தமிழர் தாயகப் பகுதியாக ஏற்றுக்கொண்டு, தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பினைத் தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் நடத்தி தேசியப்பிரச்சனைக்குத் தீர்வு காண எந்த ஆட்சி முன்வருகிறதோ அந்த ஆட்சி மட்டுமே நல்லாட்சியாக இருக்க முடியும்.

இவ்வகையான மேம்பட்ட சிந்தனைக்கு சிறிலங்காவின் எந்த ஆட்சியாளரும்; தயாராக இல்லை. தற்போதய ஆட்சியாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேசி ஒற்றையாட்சி ஆட்சிமுறையை சமஸ்டி போலக் காட்டும் வகையிலான ஓர் அரசியலமைப்பின் மூலம் தேசியப்பிரச்சினைக்குத் ‘தீர்வு’ காணும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் திட்டத்தின்படி வடக்கு கிழக்கு இணைக்கப்படப் போவதில்லை. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரங்களில் சில மாகாணங்களுக்குக் கிள்ளித் தெளிக்கப் படவுள்ளன. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கிஞ்சித்தேனும் எட்ட முடியாத ஒரு திட்டமாகத்தான் புதிய திட்டம் அமையப்போகிறது.

தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட வகையில் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பதே கூட்டமைப்பினர் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதி. இந்த வாக்குறுதிக்கு மாறான எந்தத் தீர்வுவடிவம் குறித்தும் அரச தலைவர்களுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் எவ்வகை அங்கீகாரத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் நடத்த முடியும்?
தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை நிலைப்பாடுகளை சிறிலங்கா அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனவும் இதுவே யதார்த்தம் எனவும் இக் காரணங்களுக்காகக் கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்கள் தம்மைப் பலப்படுத்திக்; கொள்ள வேண்டும் எனக் கருதுபவர்களும் எம் மத்தியில் உள்ளனர்.

தமிழ் மக்கள் தாயகத்தில் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எமக்கு முரண்பாடு எதுவும் கிடையாது. இதேவேளை தேசியப் பிரச்சனைக்கான தீர்வு என்ற பெயரில் சிறிலங்கா அரசு முன்வைக்கவுள்ள அரைகுறைத் திட்டத்தை இனப்பிரச்சனைக்கான தீர்வாகத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே எமது நிலைப்பாடு.

தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை நிலைப்பாடுகளை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளும்வரை தமிழின அழிப்புத் திட்டத்தை சிங்களம் கைவிடப்போவதில்லை. இந்நிலையில் எத்தகைய அரசியல் தீர்வும் தமிழ் மக்கள் கௌரவமாகவும் சமத்துவமாகவும் பாதுகாப்பாகவும் இனஅழிப்புக்கு உட்படாமலும் தமது அரசியல் முடிவுகளைத் தமக்காகத் தாமே எடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதை நாம் இவ்விடத்தில் மீளவும் வலியுறுத்த விரும்புகிறோம்.

வடக்கு – கிழக்குப் பகுதியில் வாழும் முஸ்லீம் மக்களுக்கும் இப்பகுதி தாயகப் பிரதேசமே. முஸ்லீம் மக்களுடன் எத்தகைய அரசியல் ஏற்பாடுகளுக்கு வருதல் என்பது குறித்து தமிழ் – முஸ்லீம் அரசியல் தலைவர்கள் தமக்குள் பேசி ஓர் உடன்பாட்டை எட்டிக் கொள்ள வேண்டும்.

அமைவிடக் கேந்திர முக்கியத்துவம் காரணமாக அனைத்துலக அரசுகளின் அக்கறைக்குரிய இடமாக இலங்கைத்தீவு இருந்து வருகிறது. தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் கேந்திர முக்கியத்துவம் உள்ள மக்களாக இருக்கிறார்கள்.

இருந்தும் தமது நலன்கள் சார்பாக இக் கேந்திர முக்கியத்துவத்தைப் பயன்படுத்துவதில் தமிழ் மக்கள் இதுவரை வெற்றியடையவில்லை. இது ஏன் என்பது குறித்து நாம் மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டும். மிக நீண்டகாலமாக அரசு அற்ற மக்களாக இருந்து வி;ட்டமையால் இராஜதந்திரப் பாரம்பரியச் செழுமை குறைந்த மக்களாக நாம் இருந்தமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது குறித்து ஈழத் தமிழர் தேசம் கூடுதல் கவனம் கொடுத்தல் அவசியம்.

மாவீரர்நாளை நினைவுகூரும் இவ் வேளை மறைந்த கியூபப் புரட்சியின் தலைவரும் முன்னாள் கியூப அரசதலைவருமான தோழர் பிடல் கஸ்ரோ அவர்களுக்கும் எமது தோழமை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஓர் ஆதர்ச நாயகனாக விளங்கியர் அவர். புரட்சி குறித்த நம்பிக்கையினை புரட்சியாளர்கள் மத்தியில் விதைத்ததில் பிடல் கஸ்ரோவுக்கும் சே குவேராவுக்கும் முக்கிய பங்குண்டு.

பிற்காலத்தில் கியூப அரசின் சிந்தனை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக மையம் கொள்ளாது தமது அரச உறவுகளையும் கோட்பாட்டு நிலைப்பாடுகளையும் மையம் கொள்ளத் தொடங்கிய பின்னர் கியூப அரசானது ஒடுக்குமுறையாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களுக்கெதிராகச் செயற்பட்டமையினையும் இத் தருணத்தில் கவலையுடன் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. எரித்திரிய விடுதலைப் போராட்டத்திலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இது நிகழ்ந்துள்ளது.

அன்பான மக்களே!

மாவீரர்கள் உயர்ந்தவொரு இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். உலக விழுமியங்களின் பாற்பட்ட ஒரு சுதந்திரமான வாழ்வு என்ற வேணவாவுடன் தமது வாழ்வை எமக்காக ஈகம் செய்திருக்கிறார்கள்.

சாதாரண மனிதர் எவரும் கற்பனை பண்ணக்கூட முடியாத அளவுக்கு அர்ப்பணிப்புடன் எம் முன்னால் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். சாவின் மீதான அச்சம் ஏதுமின்றி உரிமைகள் மீதான தமது பற்றுறுதியினை முரசறைந்து சென்றிருக்கிறார்கள்.

வீரம் என்பதற்கு புதிய அகராதி படைத்து உலகைத் தம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றை மூன்று தசாப்தகாலப் போராட்ட வாழ்வின் ஊடாகச் செதுக்கி விட்;டுச் சென்றிருக்கிறார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர் கனவு சுமந்தே தமிழீழ இலட்சியத்தினைத் தனது அரசியற்கொள்கையாக வகுத்துள்ளது. மாவீரர்களை நினைவு கொள்ளும் இன்றைய புனிதநாளில் மாவீரர்கள் கனவை நனவாக்க உழைத்திடுதல் என்பது நமது அறமாக இருக்க வேண்டும். மாவீரர் கனவை நனவாக்கும் மனவுறுதியுடன் உழைப்போம் என இன்றைய தினத்தில் மீண்டும் உறுதி எடுத்துக் கொள்வோமாக!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

நன்றி
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்