தமிழர்கள் ஆத்திரப்பட்டு ஆவேசப்படக்கூடாது! ஹக்கீம் வேண்டுகோள்

Hakeem_CIஅனுமதியின்றி வைக்கப்பட்ட புத்தர்சிலையை நீதிமன்றத்தினூடாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த விடயத்தில் தமிழர்கள் ஆத்திரப்பட்டு ஆவேசப்படக்கூடாது என அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறக்காமம் மாணிக்கமடு பகுதியில் நேற்று சனிக்கிழமை புதிதாக புத்தர் சிலையொன்று பலவந்தமாக நிறுவப்பட்டமையினால் அப்பிரதேச முஸ்லிம்கள்இ தமிழர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.

இப்பிரச்சினை தொடர்பாக இறக்காமம் பிரதேசவாசிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் பின்னர் அமைச்சர் ஹக்கீம் இன்று (30) இறக்காமம் ஸ்ரீ மாணிக்கமடு கோயிலுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்ததாவது,

நான் இது தொடர்பாக பொலிஸ் மாஅதிபருடன் பேசியுள்ளேன். இப்புத்தர் சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதால் இதனை நீதிமன்றத்தினூடாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த விடயத்தில் தமிழர்கள் ஆத்திரப்பட்டு ஆவேசப்படக்கூடாது.

இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது நல்லிணக்கத்துக்கு பாதகம் விளைவிக்கக்கூடியது.

சிறுபான்மை மக்களை வலிந்து வம்புக்கு இழுக்கின்ற சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் சட்டத்தையும் ஒழுங்கையும் தோற்றுவிப்பதில் குந்ததகம் விளைவிக்கின்றது.

நீதிமன்ற தடையையும் மீறி எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது மதத்தை பிரதிபலிக்கும் சின்னத்தையோ அடையாளத்தையோ அனுமதியின்றி பலவந்தமாக வைப்பதென்பது வணக்க வழிபாட்டுக்கோ ஆராதனைக்கோ அல்ல என்று அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

பௌத்தர் ஒருவர் கூட இல்லாத இந்தப் பிரதேசத்தில் புத்தர் சிலையொன்றினை நிறுவ வேண்டிய தேவை எதுவும் இல்லை என இறக்காமம் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிறி கூறுகையில்,

சட்டத்துக்கு முரணான வகையிலேயே இறக்காமம் பிரதேசத்தில் சனிக்கிழமை புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டதாக தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி சிலையினை குறித்த இடத்தில் வைப்பதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவொன்றை, சிலையினை அங்கு நிறுவிய பௌத்த மதகுருமாரிடம், தான் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார்.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், புத்தர் சிலையொன்று புதிதாக நிறுவப்பட்டது.

இந்த நிலையில், அந்த இடத்துக்குச் சென்ற தமண பொலிஸார், குறித்த சிலையினை அங்கு நிறுவக்கூடாது எனத் தெரிவிக்கும் நீதிமன்ற உத்தரவினை, சிலையினை நிறுவிய பௌத்த குருமாரிடம் ஒப்படைத்தனர் என தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.

சிலையினை குறித்த இடத்தில் வைப்பதற்கு முன்னதாகவே, நீதிமன்ற உத்தரவினை தான் ஒப்படைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலையினை அந்த இடத்தில் நிறுவியவர்களுக்கு நாம் பாதுகாப்பு வழங்குவதற்காக அங்கு செல்லவில்லை. சட்டத்தினை நிலைநாட்டுவதற்காகவே சென்றோம் என்றும் தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்