வடக்கில் ராஜபக்ச அணைத்த தீ மீண்டும் பற்றி எரிகிறதாம்! -விமல் வீரவன்ச

wimal-weerawansa_3வடக்கில் தற்போது பொலிஸார் வீதியில் இறங்கிச் செல்ல முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வற் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கப்பம் வழங்கி சபையில் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டு கடந்த அரசாங்கத்தால் அணைக்கப்பட்ட தீயை மீண்டும் எரியச்செய்து வருவதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலுள்ள சிவில் அமைப்புக்கள் 2015 ஜனவரி மாதத்திற்கு முன்னர் இல்லாதளவு ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆவா குழு என படுகொலைக் கும்பலொன்றும் உருவாகியுள்ளது. இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சின் ஆட்சியின் போது வடக்கில் அணைக்கப்பட்ட இனவாதத் தீ மீண்டும் எரியத் தொடங்கியுள்ளது.

அது மட்டுமன்றி, கொலம்பியா போன்று பட்டப்பகலில் கொழும்பில் படுகொலைகள் அதிகரித்துள்ளன. நாட்டின் சகல பகுதிகளிலும் பாதாள குழுக்கள் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளன. இவற்றைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியதால், கட்டியெழுப்பப்பட்ட சமாதானம் தம்மைவிட்டு நீங்கிவிடுகிறதா என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழத் தொடங்கியிருப்பதாகவும் விமல் வீரவன்ச மேலும் எச்சரித்திருக்கின்றார்.