மாணவர்கள் கொலைக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சிகளை கூட்டமைப்பு வெளிக்கொண்டு வரும்! – சுமந்திரன்

article_1435577002-SumanthiranMPமாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தை ஒரு வீதி விபத்து என வர்ணித்து, மூடி மறைக்க முயற்சித்த பொலிஸாரின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவத்தை பொலிஸார் ஏன் மூடி மறைக்க முனைந்தார்கள் என்பது பாரியதொரு கேள்வியாக உள்ளது. மாணவர்கள் ஓடி ஒழிக்கப் பார்த்ததாகவும், மோட்டார் சைக்கிளை மறித்த போது நிறுத்தவில்லை, அதனாலேயே சுட்டோம் என பொலிஸார் கூறுவதிலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

மோட்டார் சைக்கிள் ஓடுபவர்களுக்குப் பின்னால் இருந்து சுட்டால், வாகனம் ஓட்டியவருக்கு எவ்வாறு முன்னால் துப்பாக்கி சூடுபட்டது? இந்த சம்பவத்தை முழுமையாக ஆராய்ந்து, இதற்கு பின்னால் வேறு சூழ்ச்சிகள் உள்ளதா? ஏன் இவ்வாறு பொலிஸார் நடந்து கொண்டார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் தேவையாக உள்ளது. மாணவர்களின் படுகொலைச் சம்பவத்தை சாதாரண விடயமாக எடுத்துவிட முடியாது. இதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்நிறுத்தும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான பங்களிப்பை வழங்கும்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் வட மாகாணத்தில் பொலிஸாரை வீதியில் காண முடியாது உள்ளது. பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவில்லை. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணச் சடங்கின் போது, வீதியால் பெருந்திரளான மக்கள் சென்ற போதும் கூட, பொலிஸார் எவரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவில்லை. இது கண்டிக்கத்தக்க விடயம். பொலிஸார் தங்களுடைய கடமையில் ஈடுபடாமல் இருப்பதற்கு, இதற்கு பின்னால் ஏதாவது சிந்தனைகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும். பொலிஸ் மாஅதிபர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.