சமஷ்டி நாட்டைப் பிரிக்கும் செயல் அல்ல! – மங்கள சமரவீர

mangala-samaraweera1-300x200பிரிக்கப்படாத நாட்டை உருவாக்கும் நோக்கத்திலேயே புதிய அரசியலமைப்பை அரசாங்கம் தயாரித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சமஷ்டி என்பது நாட்டைப் பிரிக்கும் ஒரு செயல் இல்லாத போதிலும், சமஷ்டியை வைத்து மக்களை அச்சத்திற்குள்ளாக்க சில குழுக்கள் திட்டமிட்டு செயற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அமெரிக்காவிற்கு சென்றிருந்தபோது அதிகாரப் பரவலாக்கத்துடனான சமஷ்டி முறையைக் கொண்ட அரசியலமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது குறித்து மங்கள சமரவீரவிடம் ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், “அமெரிக்காவில் நியுயோர்க் நகரில் ஸ்ரீலங்கா பிரஜைகளை சந்தித்த சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் கலந்துரையாடினேன். ஸ்ரீலங்காவில் அனைத்து இன மக்களுக்கும் சமாதானத்துடனும், கௌரவத்துடனும் வாழக்கூடிய பிரிக்கப்படாத ஐக்கிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான சட்டதுமூலமாகவே தான் புதிய அரசியல் யாப்பை கருதுவதாகவே நான் அவர்களிடம் தெரிவித்தேன். இதனைவிடவும் நாம் வேறு எதனையும் கூறவில்லை.

சமஷ்டி எனப்படுவது நாட்டை பிரிக்கும் ஒரு செயலல்ல. எனினும் 1997ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பே உண்மையில் சமஷ்டியை வலியுறுத்தியிருந்தது. எனினும் அதுபோன்றவொரு அரசியல் யாப்பினை உருவாக்குவதில் மக்களிடையே சில சிக்கல்கள் காணப்படுவதால். பிரிக்கப்படாத ஐக்கிய அரசு ஒன்றை உருவாக்குவது தொடர்பிலேயே அவதானம் செலுத்தியுள்ளோம். சமஷ்டியை வைத்து மக்களை அச்சத்திற்குள்ளாக்க சில குழுக்கள் திட்டமிட்டு செயற்படுகின்றன. எனினும் புதிய யாப்பு ஸ்ரீலங்காவின் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக அமையும் என்று குறிப்பிட்டார்.