கடற்படைச் சிப்பாயைத் தாக்கிய ஆறு பேருக்கு விளக்கமறியல்

mannar-courtமன்னார் -முத்தரிப்புத்துறை மீனவக் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த கடற்படை சிப்பாயை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆறு பேரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் கிறேஸியஸ் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் நகரிலிருந்து தெற்கே 35 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள முத்தரிப்புத்துறை கிராமத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டு, கிராம மக்களால் கட்டிவைத்து நையப்புடைத்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தினால் கடும் ஆத்திரமடைந்துள்ள கடற்படையினர் முத்தரிப்புத்துறை கிராமத்தை சூழ ஏராளமான படையினரை குவித்துள்ளதுடன், என்றுமில்லாத அளவிற்கு ரோந்துப் பணிகளையும் அதிகரித்து பாதுகாப்புக் கெடுபிடிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனால் அங்கு தொடர்ந்தும் அச்சமான நிலை நீடித்து வருவதால் மக்கள் வெளிநடமாட்டங்களை முற்றாகத் தவிர்த்துக்கொண்டு வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அதுமாத்திரமன்றி மீனவர்களும் தொழிலுக்குச் செல்வதை முற்றாக தவிர்த்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தொடரும் பதற்றத்தையும், அச்சமான சூழ்நிலையையும் தணித்து கிராம மக்களையும், கடற்படையினரையும் சுமுகமான நிலைக்கு கொண்டுவரும் முகமாக முத்தரிப்புத்துறை கிராம பங்குத்தந்தை டெனிகலிஸ்சடர் உள்ளிட்ட அருட்தந்தையர்கள், சட்டத்தரணிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிராமத்திற்குள் புகுந்து மக்களை அச்சுறுத்த முற்பட்ட கடற்படையினரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞர்கள் பத்து பேரில் ஆறு பேர் சிலாபத்துறை பொலிசாரிடம் சரணடைந்த நிலையில் அவர்களை மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பில் சிலாபத்துறை பொலிசாரால் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மன்னார் நீதிவான் கிறேஸியஸ் அலெக்ஸ்ராஜா சந்தேகநபர்கள் ஆறு பேரையும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பை நடத்துவதாகவும் அறிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான கடற்படையினர் தம்மை தாக்கிய நபர்களை அடையாளம் காட்ட முடியும் என்று கூறிவருவதாக பொலிசார் நீதவானிடம் தெரிவித்ததை அடுத்தே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றார்.

இன்று வழக்கு விசாரணை இடம்பெற்ற போது முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு முன்னால் கூடியிருந்தனர். எனினும் அவர்களில் ஒருசிலரே நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முத்தரிப்புத்துறை பங்குத் தந்தை உட்பட பிரதேச அருட்தந்தையர்கள், பொது மக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.