கோத்தபாயவைக் காப்பாற்ற முனைகிறார் ஜனாதிபதி! – விக்கிரமபாகு குற்றச்சாட்டு

vikramabahuசட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாரதூரமான படுகொலைகள் மற்றும் ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்ற முனைவது கவலைக்குரியது என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஒரு கூட்டத்திற்கு வர வேண்டிய தேவை ஏற்படுமென ஒருபோதும் நினைக்கவில்லை. இந்த அரசாங்கத்தின் கீழ் அனைத்து குற்றங்களும் வெளிவந்து குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமென நாங்கள் நம்பினோம். எனினும் எக்னெலிகொட, தாஜுடீன், லசந்த, ரவிராஜ் உள்ளிட்டவர்களுக்கு நடந்த கொடுமைகள் தொடர்பில் நாங்கள் தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த வாரம் ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. குற்றங்களை கண்டறிந்து அதனை நீதிமன்றுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு அச்சம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கோத்தபாய தொடர்பில் நாம் விசாரணை செய்ய வேண்டாமென நான் கூறவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனினும் ஜனாதிபதியின் உரையில் கோத்தபாய பற்றியே பேசியிருந்தார்.

மேலும் கோத்தபாயவை விடவும் பாரதூரமான விடயங்கள் இருக்கின்றன. ஏன் விசாரணை செய்யவில்லை என பலர் கேட்கின்றனர். இது தொடர்பில் அழுவதாக சிரிப்பதா என தெரியவில்லை. இந்த நாட்டு மக்களை அச்சத்திற்குள்ளாக்கிய, பல கொலைகளுக்கு காரணமாக இருந்த, அதேபோல் எமது மிகப்பெரிய கொள்ளை நடவடிக்கைக்கு எமது இராணுவத்தை அனுப்பிய கோத்தபாய பற்றி விசாரணை செய்வதைவிடவும் மிகப்பெரிய காரியம் எதுவென்று தெரியவில்லை.

அவர் தொடர்பில் விசாரணை செய்து இடம்பெற்ற குற்றச் சம்பவங்களுடன் அவருக்கு என்ன தொடர்பு என்பதை கண்டுபிடிக்க வேண்டுமென்பதே எமது ஆரம்ப மற்றும் தற்போதைய நிலைப்பாடு, எனினும் இந்த அரசாங்கம் மீது தற்போது நம்பிக்கையற்ற தன்மையே ஏற்பட்டுள்ளது என்றார்.