தமிழகத்திற்கு கர்நாடகா மேலும் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: மாண்டியாவில் போராட்டம் வெடித்தது

iuதமிழகத்திற்கு கர்நாடகா மேலும் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் போராட்டம் வெடித்துள்ளது.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவின் மீது கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தம் கோரும் மனுவை விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவுடன் இந்த மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும்,
கர்நாடகாவின் தீர்மானங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை கட்டுப்படுத்தாது. உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட்டால் அது நீதிமன்றம் மாண்பை பாதிக்கும். மேலும் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட வேண்டும்.கூட்டாட்சி தத்துவத்தை மத்திய மாநில அரசுகள் மதித்து நடக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், வழக்கு விசாரணையை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பேரவையில் தீர்மானம் நிறைவேறினாலும் கட்டாயம் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பையடுத்து கர்நாடகா மாநிலத்தின் மாண்டியாவில் போராட்டம் வெடித்துள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும், மத்திய அரசு நெருக்கடி கொடுத்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர விடமாட்டோம் என்று விவசாயிகள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட களத்தில் விவசாயிகள் குதித்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. அதேசமயம், மாண்டியா – பெங்களூரு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்துள்ளது.