ஐ.நா வில் பாகிஸ்தான் குறித்து சுஷ்மா சுவராஜ் பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு

jkகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, காஷ்மீர் பற்றிய கனவை பாகிஸ்தான் விட்டுவிட வேண்டும் என்று ஐ.நா.வில். சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்து பேசினார். இந்த உரைக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.சபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு உலக வரைப்படத்தில் இடமில்லை. மேலும் பாகிஸ்தானிடம் இந்தியா நட்பாக இருக்க விரும்புகிறது. ஆனால் அதற்கு பரிசாக உரி மற்றும் பதான்கோட்டு தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தான் தமது சுயரூபத்தை வெளிப்படுத்தியது.

“பாகிஸ்தானுக்கு என்னுடைய உறுதியான அறிவுரை என்னவென்றால், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, காஷ்மீர் தங்களுக்கு கிடைக்கும் என பாகிஸ்தான் பிரதமர் கனவு கான்பதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுஷ்மா சுவராஜ் இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியதாவது:

சரியான நேரத்தில், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக நாட்டின் குரலை ஐ.நா.,வில் சுஷ்மா சுவராஜ் ஓங்கி ஒலித்துள்ளார் அவருக்கு பாராட்டுக்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதனிடையே, ஐ.நாவில் சுஷ்மா ஆற்றிய உரை மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சிக் கருத்துத் தெரிவித்துள்ளது.