மீண்டுமொரு தடவை அவர்கள் குப்பைக்குள் தள்ளப்படுவார்கள்!

7ytyஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் அரசியல்வாதிகள் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டியது மிக முக்கியமானதொன்றாகும்.

அவர்களின் வாய்களிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் வெற்றுவார்த்தைகளாகும் போது தான் பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைந்து விடுகின்றது.

மக்களுக்கு நம்பகத் தன்மையை உறுதி செய்வதன் மூலம் தான் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.

எமது நாட்டில் ஜனநாயக அரசியல் இன்று இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவே நோக்க முடிகிறது.

தேர்தல் கால அரசியல் செயற்பாடுகளைவிட மிக மோசமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலேயே சில எதிரணிச் சக்திகள் முனைப்புக் காட்டி வருகின்றன.

கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று ஜனநாயகத்தை குழப்புவதில் தீவிர ஈடுபாட்டைக் காட்டி வருகின்றனர்.

ஜனநாயக அரசியல் கலாசாரத்தின் மேன்மையை உணராமல் அந்தப் பொறிமுறையை குழப்பி மக்களை தவறாக வழி நடத்தும் ஒரு பிரயத்தனத்தில் இந்த நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் செயற்பாடானது ஜனநாயக அரசியல் தர்மத்துக்கு முரணானதாகும்.

நாட்டில் ஊழல், மோசடி மற்றும் அரசியல் தலையீடுகளை ஒழித்துக்கட்டும் முயற்சியில் நல்லாட்சி அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அதனை துளியளவும் விரும்பாத சிலர் இன்று வெற்றுக் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது.

உருப்படியான நோக்கங்க ள் எதுவுமின்றி ஜனநாயக பொறிமுறையை குழப்புவதிலும், மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதுமே இவர்கள் செய்கின்ற ஒரே பணியாகும்.

அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் குறித்து இவர்கள் அக்கறை காட்டவில்லை.

மக்களால் கடந்த வருடம் ஆகஸ்டில் நிராகரிக்கப்பட்டு குப்பைக்குள் வீசப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு சரியான வழியைத் தேடிக் கொள்ளாமல் மேலும், மேலும் குறுக்கு வழிகளையே நாடுவதானது அவர்களின் அரசியல் வங்குரோத்துத் தனத்தையே காட்டுவதாக நோக்க வேண்டியுள்ளது.

காலம் கடந்த. சீரணிக்க முடியாத கோட்பாடுகளை மீண்டும் தமது அரசியல் பயணத்துக்குப் பயன்படுத்துவதானது எந்த விதத்திலும் மக்களால் அங்கீகரிக்கக் கூடியதல்ல.

இன்று நாட்டில் நீதித்துறை எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது.

முன்னைய ஆட்சியில் நீதிபதிகள் தொலைபேசி மூலம் அறிவுறுத்தப்பட்டனர்.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து தீர்ப்புகள் தயாரிக்கப்பட்டு நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டு தீர்ப்புக் கூற வைத்த யுகம் இன்று மாற்றப்பட்டு விட்டது.

இதேபோன்று அன்று சுயாதீன ஆணைக்குழுக்களைக் கூட சுயாதீனமாக இயங்க இடமளிக்கப்படவில்லை.

2010ல் 223 பெரும்பான்மை வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சுயாதீன ஆணைக் குழுக்கள் அன்றைய ஜனாதிபதியால் முற்றாக ரத்துச் செய்யப்பட்டது.

ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நாட்டில் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியும், அவரது அரசாங்கத்தினரும் படிப்படியாக சர்வாதிகாரத்தின் பக்கமே பயணித்துக் கொண்டிருந்தனர்.

அன்று எவராலும் அரசை விமர்சிக்க முடியாத அவலமே காணப்பட்டது.

ஜெர்மனியின் ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பான வகையிலேயே நாடு அன்று ஆளப்பட்டுக் கொண்டிருந்தது.

இதற்கு முடிவு கட்டுவதற்கு நாட்டு மக்கள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த வண்ணமிருந்தனர்.

2015 ஜனவரி 8ம் திகதி நாட்டு மக்கள் சரியான தீர்ப்பை வழங்கினர்.

மஹிந்த ராஜபக்சவை நாட்டு மக்கள் தமது வாக்குப் பலத்தால் தூக்கி வீசி விட்டனர்.

நாட்டில் மக்களாட்சி மீண்டும் மலர்ந்தது. அதன் பின்னர் 2015 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததும் உலக வரலாற்றில் முதற் தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றுபட்டு நல்லாட்சி என்ற தேசிய அரசாங்கத்தை அமைத்து நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் உறுதிப்படுத்தி விட்டனர்.

எதேச்சதிகாரப் பிடியிலிருந்து மீட்கப்பட்ட தேசத்தை மீண்டும் அழிவுக்குள் தள்ளும் தீய சக்திகளின் முயற்சிகளுக்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

மஹிந்த அணியினர் தமது சதி முயற்சிகளை மீளவும் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறானதொரு முயற்சிக்கு இடமளிக்க முடியுமா? என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமது அரசியல் நலன்களுக்காக நாட்டை மீண்டும் அழிவுக்குள் தள்ளும் ஒரு முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த சதிக் கும்பலுக்கு மக்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என்று மக்கள் அன்று எடுத்த முடிவிலிருந்து துளியளவும் விலகவில்லை.

அரசு தரப்பிலுள்ளவர்கள் கூட இன்று தண்டிக்கப்படுகின்றனர். அதில் கட்சிகளிரண்டும் தலையீடு செய்வதில்லை.

சட்டம் சகலருக்கும் சமம் என்பதை நல்லாட்சி அரசு உறுதி செய்துள்ளது.

எவருக்கும் அழுத்தங்களை பிரயோகித்து யாரையும் அச்சுறுத்தும் செயற்பாடுகளை நல்லாட்சி அரசு முன்னெடுக்கவில்லை.

கடந்த தேர்தலுக்குப் பின்னர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அவர்கள் திருந்த முன்வர வேண்டும். மக்களோடு இணைந்து வாழப் பழக வேண்டும்.

இவை இரண்டில் ஒன்றையாவது செய்யாமல் ஜனநாயகத்தை குழப்ப முனைந்தால் மீண்டுமொரு தடவை அவர்கள் குப்பைக்குள் தள்ளப்படுவார்கள்.

அதிலிருந்து மீள்வது மிகக் கடினமானதாகவே இருக்கும்.இந்தக் கூற்றினையே பிரமதர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

பிரதமரின் இந்த கோரிக்கையை எதிரணியினர் ஏற்றுச் செயற்பட முனைவதன் மூலமே அவர்களால் எதிர்காலத்தில் மக்களை நெருங்கக்கூடியதாக இருக்கும்.

அரசின் நல்லாட்சிப் பயணத்தை தடுப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பது திண்ணம்.