தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு மத்திய அரசை வற்புறுத்த முடிவு

utyதமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20–ந் தேதி உத்தரவிட்டது.

அனைத்து கட்சி கூட்டம்

அத்துடன், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு காரணமாக, கர்நாடகத்தில் போராட்டங்கள் அதிகரித்தன.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு குறித்து, கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்தார். அதில், தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று அனைத்து கட்சிகளும் தெரிவித்தன.

அதைத்தொடர்ந்து, கர்நாடக மந்திரிசபை கூட்டத்தையும் சித்தராமையா கூட்டினார். அதில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், இப்பிரச்சினை குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபையின் அவசர கூட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) கூட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கவர்னருடன் சந்திப்பு

இந்நிலையில், முதல்–மந்திரி சித்தராமையா நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்தார். அப்போது, சட்டசபை சிறப்பு கூட்டத்தை இன்று நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதை ஏற்றுக்கொண்டு, கவர்னர் வஜூபாய் வாலா அனுமதி வழங்கினார். அதன்படி, கர்நாடக சட்டசபையின் இரு அவைகளின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

டெல்லி சென்றார்

பின்னர், முதல்–மந்திரி சித்தராமையா தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்த சித்தராமையா திட்டமிட்டு இருந்தார்.

ஆனால், பிரதமரை சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

உமாபாரதியுடன் சந்திப்பு

அதனால், மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதியை அவரது அலுவலகத்தில் சித்தராமையா சந்தித்து பேசினார். அப்போது, எக்காரணம் கொண்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக்கூடாது என்று அவர் வற்புறுத்தினார். சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தகட்ட விசாரணை வரும்போது, இதுகுறித்து மத்திய அரசு சார்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து பரிசீலிப்பதாக மத்திய மந்திரி உமாபாரதி உறுதி அளித்தார்.

வக்கீல் நாரிமனுடன் சந்திப்பு

பின்னர், காவிரி வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் நாரிமனை அவரது வீட்டில் முதல்–மந்திரி சித்தராமையா சந்தித்து பேசினார்.

அப்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிராகரிப்பது தொடர்பாக கர்நாடக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது குறித்து எடுத்துக் கூறி ஆலோசனை நடத்தினார். இதனால் என்ன மாதிரியான சட்ட சிக்கல் ஏற்படும் என்றும் அவரிடம் சித்தராமையா ஆலோசனை பெற்றதாக தெரிகிறது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்கையும் சித்தராமையா சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா

இதற்கிடையே, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூறிய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து, கர்நாடக தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். இப்பிரச்சினையில், பிரதமர் தலையிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

காவிரி ஹிதா ரக்ஷனா சமிதியின் தலைவர் மாதே கவுடா, டிக்கெட் எடுக்காமல் அரசு பஸ்சில் பயணம் செய்யும் ஒத்துழையாமை போராட்டத்தை தொடங்கினார். மைசூரு மாநகராட்சி முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.