உச்சநீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்கிறாரா? எதிர்க்கிறாரா? மு.க.ஸ்டாலின் கேள்வி

huகாவிரியில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்கிறாரா? அல்லது எதிர்க்கிறாரா? என்பதை விளக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

6 ஆயிரம் கன அடி தண்ணீர்

தமிழகத்திற்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பு வந்த பிறகு, 6 ஆயிரம் கன அடி தண்ணீர் போதுமானது என்று சொன்னாலும், ஒரு ஆறுதலுக்காக வழங்கக்கூடிய தண்ணீரின் அளவை, தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளின் தலைவர்களும், அதேபோல எல்லா விவசாய சங்கங்களின் நிர்வாகிகளும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, வரவேற்று இருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய அரசாங்கமாக இருந்தாலும் சரி, அங்கு இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி, பல்வேறு கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இருக்கின்றார்கள். தண்ணீர் தர மாட்டோம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் அனைத்து கட்சி கூட்டங்களை பலமுறை கூட்டி இருக்கின்றார்கள். அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூட்டப்படுவதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கர்நாடக மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

விளக்க வேண்டும்

ஆனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டவில்லை, சட்டசபை கூட்டத்தை நடத்துவதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை, பிரதமரை சந்தித்து முறையிடுவதற்கான அந்த நிலையையும் ஏற்படுத்தவில்லை.

நான் கேட்கக் கூடிய ஒரே கேள்வி என்னவென்றால், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழக முதல்-அமைச்சர் வரவேற்கின்றாரா? அல்லது எதிர்க்கிறாரா? என்பது மர்மமாக இருக்கிறது. எனவே இதற்கான விளக்கத்தை அவர் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.