டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது

kjடெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக் காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அணையையொட்டி உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்படுவதால் 110 மெகாவாட் மின் உற்பத்தியும் தொடங்கியது.

சம்பா சாகுபடி

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்காததால் மேட்டூர் அணைக்கு போதுமான நீர் வரத்து இல்லை. இதன் காரணமாக அணையின் நீர்இருப்பு கடந்த ஆகஸ்டு மாதம் கடைசி வாரம் வரை குறைவாகவே இருந்தது.

இதனால் டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படவில்லை. தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா பகுதிகளில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடைபெறவில்லை. எனவே, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என டெல்டா பாசன விவசாயிகள் தமிழக அரசை வலியுறுத்தி வந்தார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டை நாடி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள படி கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என இடைக்கால மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை கடந்து மேட்டூர் அணையை கடந்த 8-ந் தேதி நள்ளிரவு வந்தடைந்தது.

தண்ணீர் திறப்பு

இந்த நீர்வரத்தின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. இதையடுத்து டெல்டா பாசன விவசாயிகளின் நலன் கருதி சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்பேரில், நேற்று காலை 8 மணியளவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பொத்தானை அழுத்தி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைத்தார்.

நீர்மட்டம் 87.68 அடி

இதைத்தொடர்ந்து அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், இன்று (நேற்று) காலை 8.03 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. முன்னதாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மாலை 6 மணிக்குள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும். காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 87.68 அடியாக இருந்தது. அணையின் நீர்இருப்பு 50.03 டி.எம்.சி. ஆகும். அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 92 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரை விவசாய பெருங்குடி மக்கள் சிக்கனமாக பயன்படுத்தவும், நீர்பங்கீட்டின் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறைவைத்து பயன்படுத்த நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறும், விவசாயிகள் அதிக அளவில் மகசூல் பெற்று பயனடையுமாறும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின் உற்பத்தி தொடங்கியது

இந்த தண்ணீர் திறப்பின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை ஆகிய 12 மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படும் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் சிறிது நேரத்துக்கு பிறகு அணையையொட்டி அமைந்துள்ள அணை நீர்மின் நிலையம், சுரங்க நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் இந்த நீர்மின் நிலையங்கள் மூலம் 110 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கியது. மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை, பவானி உள்பட 7 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கதவணை மின்திட்டங்கள் மூலமும் மின் உற்பத்தி நடந்து வருகிறது.