போர் பற்றிய தெளிவான படத்தை தனது நூல் வெளிப்படுத்துமாம் – சரத் பொன்சேகா கூறுகிறார்

uiதாம் விரைவில் வெளியிடவுள்ள நூல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான தெளிவான படத்தை வழங்கும் என்று, சிறிலங்காவின் அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பீல்ட் மார் ஷல் சரத் பொன்சேகா,

“போர் தொடர்பாக, ஒரு இராணுவ அதிகாரி அண்மையில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தொடர்புபட்ட ஏனைய பல அதிகாரிகளும் மேலும் பல நூல்களை வெளியிடலாம்.

ஒரு இராணுவத் தளபதி என்ற வகையில் எனது பங்கை உள்ளடக்கியதாக வெளியிடவுள்ள நூல், போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பான இன்னும் தெளிவான படத்தை வழங்கும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதி வெளியிட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலில் இராணுவ இரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியிருந்தார்.

எனினும், தாம் எந்த இராணுவ .இரகசியத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றும், போர் தொடர்பான இரகசியங்கள் தன்னுடன் புதைகுழியிலேயே புதைக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.