இங்கிலாந்து முன்னாள் பிரதமர் கேமரூன் எம்.பி.பதவி ராஜினாமா

vnvnஇங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் எம்.பி. பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.

இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் டேவிட் கேமரூன் (49). ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிப்பது குறித்து பொது மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் நீடிக்க வேண்டும் என கேமரூன் பிரசாரம் செய்தார். ஆனால் வெளியேற வேண்டும் என கூறி 52 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். டேவிட் கேமரூன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து இவரது அமைச்சரவையில் உள்துறை மந்திரி ஆக இருந்த தெரசா மே புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த கேமரூன் வருகிற 2020-ம் ஆண்டு அதாவது அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை எம்.பி. பதவியில் நீடிப்பேன் என கூறி இருந்தார். ஆனால் எம்.பி. பதவியையும் தற்போது ராஜினாமா செய்து விட்டார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்ஸ்போர்டுஷிரில் உள்ள விட்னீ தொகுதியில் உரிய கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாகவும், விட்னீ தொகுதிக்கு தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வழிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். விட்னீ தொகுதியில் டேவிட் கேமரூன் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக உள்ளார்.

மேலும் பேசுகைகையில், பிரதமர் தெரசா மேவிற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், அவருடைய வலிமையான தலைமையின் கீழ் பிரிட்டன் வளர்ச்சியடையும் என்று டேவிட் கேமரூன் கூறிஉள்ளார். இருப்பினும் தன்னுடைய பொது வாழ்க்கை தொடரும் என்றும் பிரிட்டனுக்கு தன்னுடைய பயனுள்ள பங்களிப்பு இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே கேமரூன் ஆட்சியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளை தெரசா மே மாற்றினார் என்றும் இதனால் அவர்களுக்குள் (கேமரூன் – தெரசா மே) ஏற்பட்ட மோதலே எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலக காரணமாக அமைந்தது என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். டேவிட் கேமரூன் கடந்த 2010-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார். அப்போது இங்கிலாந்தில் சமீபகாலங்களில் மிக குறைந்த வயதில் பிரதமர் பதவி ஏற்றவர் என்ற பெருமையை பெற்றார்.