வங்காள தேசத்தில் பயங்கரம் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து; 25 பேர் கருகி சாவு

8ghவங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவுக்கு வடக்கே டோங்கி என்ற இடத்தில், ‘டெம்பாகோ பேக்கேஜிங் பேக்டரி’ என்ற பெயரில் 4 தளங்களுடன் கூடிய கட்டிடத்தில் ஒரு ஆலை இயங்கி வந்தது.

இந்த ஆலையில் நேற்று காலை சுமார் 6¼ மணிக்கு வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு பாய்லர் (கொதிகலன்) வெடித்து தீப்பிடித்தது. தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியது. பெரிய அளவில் புகை மண்டலமும் உருவானது. தகவல் அறிந்ததும் 20 தீயணைப்பு படை பிரிவினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பல மணி நேரம் கடுமையாக போராடினர்.

இந்த தீ விபத்தில் 25 பேர் உடல் கருகி பலியாகி விட்டதாகவும், 50–க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

காயம் அடைந்தவர்கள் டாக்கா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், குர்மிட்டாலோ ஆஸ்பத்திரிக்கும் எடுத்துச்செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 10–க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொழிலாளர் நலத்துறை ராஜாங்க மந்திரி முஜிபுல் ஹக் சுன்னு சம்பவ இடத்துக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து பார்வையிட்டார்.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் டாக்கா (சுமார் ரூ.85 ஆயிரம்) நிதி உதவி வழங்கப்படும் எனவும், இந்த தீ விபத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

இதற்கிடையே காஜிப்பூர் மாவட்ட நிர்வாகம், இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு 5 பேரை கொண்ட குழுவை அமைத்துள்ளது.