மின்சார சபை ஊழியர்களின் சேமலாப நிதி மோசடி விசாரணையை துரிதப்படுத்த பணிப்பு!

iஇலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி நிதியத்தின் 300 கோடி ரூபாய் நிதியானது தனியார் நிறுவனம் ஒன்றினால் முதலீடு செய்யப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அதிகாரிகளை பணித்துள்ளார்.

இன்று மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விசாரணையுடன் தொடர்புடைய கோவைகள் சில காணாமல் போயிருப்பதாகவும், அது குறித்து தனியான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, தற்போது பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதனுடன் தொடர்புடையவர்கள் மிக விரைவில் அடையாளம் காணப்படவுள்ளதாகவும், அவ்வாறானவர்களுக்கு எதிராக பக்கசார்பின்றி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எதிர்காலத்தில் மின்சார சபை ஊழியர் சேமலாப நிதியத்துக்கான பொறுப்பான சபை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.