போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு துவிச்சக்கரவண்டிகளை வழங்கிய ஜேர்மனி “உதவும் உள்ளங்கள்”

போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு துவிச்சக்கரவண்டிகளை வழங்கிய ஜேர்மனி “உதவும் உள்ளங்கள்”

cycle_sritharan_help_002

போரினால் பாதிக்கப்பட்டுக் கல்வியைத் தொடர்வதற்குப் பெரும் இன்னல்களைச் சந்திக்கும் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு ஜேர்மனி நாட்டில் இயங்கும் “உதவும் உள்ளங்கள்” (Helping Hearts)  அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாகத் துவிச்சக்கரவண்டிகளை வழங்கியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தன் தலைமையில் இன்று அறிவகத்தில் வைத்து மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

இவ் உதவியானது, கிளிநொச்சி மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளற்ற, பல மைல் தூரம் கால் நடையாகப் பள்ளி செல்லும் மாணவர்களைக் கொண்டுள்ள கண்ணகைபுரம், நஞ்சுண்டான்காடு, ஆனைவிழுந்தான் போன்ற பிரதேசங்களிலிருந்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் “உதவும் உள்ளங்கள்” அமைப்பால் ஆற்றப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,

காலமறிந்து எம் சிறார்களின் கல்விக்காக ஜேர்மனியில் இருந்து “உதவும் உள்ளங்கள்” அமைப்பு ஆற்றும் மனித நேயப் பணியினை நாம் மானசீகமாக வரவேற்கிறோம்.

நாம் ஏதுமற்றவர்கள் என்ற நிலை மாற்றப்பட்டு எமக்கும் உதவுவதெற்கென உறவுகள் இருக்கின்றார்கள் என்ற செய்தியை இந் நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. இவ் உதவியைத் தகுந்த முறையில் பயன்படுத்தி இவ் உலகத்தை வெற்றி கொள்வதற்கு கடும் முயற்சியுடன் முன்னேற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன், இ.பொன்னம்பலநாதன், சி.சுப்பையா, செ.புஸ்பராசா, சி.தவபாலன், த.சேதுபதி ஆகியோரும், கட்சி செயற்பாட்டாளர் வீரவாகுதேவர், மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.