யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளில் இடம்பெற்ற சுனாமி நினைவு அஞ்சலி நிகழ்வுகள்!

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளில் இடம்பெற்ற சுனாமி நினைவு அஞ்சலி நிகழ்வுகள்!

tsunami-tamil (10)சுனாமி கடல்கோளின் 9ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் கடல்கோளில் உயிர்நீத்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு வடமராட்சி கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்த நிலையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு தங்கள் உறவுகளுக்காக அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். 2004ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ம் திகதி காலை சுனாமி கடல்கோள் தாக்கத்தினால் பல ஆயிரக்கணக்கான கரையோர மக்கள் உயிர் நீத்தனர். இதில் வடமராட்சி கிழக்கில் உயிர் நீத்த மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் அஞ்சலி நிகழ்வு மணற்காடு தேவாலயத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது காலை 9 மணி தொடக்கம் கிறிஸ்தவ சமய ஆராதனைகள் நடத்தப்பட்டு, உயிர் நீத்தவர்களின் நினைவிடங்களில் உறவினர்களால் அஞ்சலிகளும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சுற்றுச் சூழல் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும், பெருமளவு மக்கள் மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உயிர்நீத்தவர்களுக்காக அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.