வடக்கு மாகாணசபை மீது கைவைக்கத் தயாராகும் மத்திய அரசு! – விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரத்திட்டம்

வடக்கு மாகாணசபை மீது கைவைக்கத் தயாராகும் மத்திய அரசு! – விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரத்திட்டம்

வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளார். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய அமைச்சின் அதிகாரியொருவர், இதற்கான கோரிக்கை கடிதம் தயாராகி வருகின்றது எனவும் தெரிவித்தார்.

வடக்கு, வடமத்திய உட்பட சில மாகாண சபைகளில் நிதிப் பயன்பாடு பங்கீடுகளின் போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தனிநபர்களும், அமைப்புகளின் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மாகாண சபைகள் இவ்வாறு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினாலும் மத்திய அரசு மீதே மக்கள் விரக்தியடைகின்றனர். இது தேசிய அரசுக்கு எதிர்காலத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவேதான் நிதி மோசடி பற்றி விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எனினும், நெருக்கடியான சூழ்நிலைகளின்போது மத்திய அரசின் பிரதானிக்கு அதில் தலையிடுவதற்குரிய அதிகாரம் இருக்கின்றது. ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவே மாகாண ஆளுநர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.