அரசாங்கத்தின் மீது எப்படி குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையானது கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்டதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மொரகாகந்த நீர்தேக்கத்திற்கு தண்ணீரை திறந்து விடும் சுப நிகழ்வின் பின்னர் ஹெலஹெர மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,இந்த பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை தான் உட்பட தமது தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

எப்படியான சவால்கள் வந்தாலும் ஏற்றுக்கொண்ட இந்த பொறுப்பை சரியாக முறையில் நிறைவேற்றி நாட்டை வளர்ச்சிமிகு நாடாக கட்டியெழுப்பும் பணிகளை மக்களுடன் இணைந்து நிறைவேற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் காலநிலை மற்றும் பருவனிலை காரணமாக மிகப் பெரிய வறட்சியை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

மக்களை பட்டினியில் வைத்திருக்க அரசாங்கம் தயாரில்லை. கூடிய விரைவில் வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து, குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான அரசியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.