ரொரன்ரோவில் இன்று இந்த ஆண்டின் முதலாவது கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அந்த கடுமையான பனிப்பொழிவை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல் நடவடிக்கைகளில் நகர அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமது நடவடிக்கைகளை ரொரன்ரோ நகரின் குளிர்கால நடவடிக்கை திணைக்களம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை 4 மணிக்கே உப்பு வீசும் பணிகளை அது ஆரம்பித்துள்ளதாகவும், காலைநேரத்திற்கான போக்குவரத்து நெரிசல் குறைவடையும் வரையில் இந்த நடவடிககை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை வீதிகளில் போக்குவரத்துக்களை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

ரொரன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பாகங்களில் பயணங்களை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான பனிப்பொழிவு, வீதிகள் வழுக்கும் தன்மை, பார்வைப் புலக் குறைபாடு போன்றவற்றால் இடர்பாடுகள் ஏற்படலாம் என்பதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் பத்து சென்ரிமீட்டர் வரையிலான பனிப்பொழிவு இன்றைய நாள் பதிவாகக்கூடும் எனவும், நேரம் செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரிப்பதோடு, பனிப்பொழிவும் அதிகரிக்கலாம் எனவும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளளது.

அத்துடன் இன்று நண்பகலுக்கு பின்னர் பனிப்பொழிவானது, மழை வீழ்ச்சியாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.