கனேடியப் பெண் துருக்கியில் கைது

கனேடியப் பெண் துருக்கியில் கைது

canadian-womenகனேடியப் பெண் ஒருவர் துருக்கிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துக்கியின் அதிபரை அவமதித்ததான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவைச் சேர்நத 50 வயதான ஈஸ் ஹப்பர்(Ece Heper) என்ற அந்த பெண் தனது முகநூலில் தெரிவித்த கருத்தானது துருக்கிய அதிபரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டு, கடந்த 30ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்

ஈஸ் ஹப்பர் கடந்த 28ஆம் திகதி வெளியிட்டுள்ள தனது முகநூல் பதிவில், ஊடகவியலாளர்களை துருக்கிய சனாதிபதி சிறைகளில் அடைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், ஐ.எஸ் அமைப்புக்கு துருக்கி ஆதரவளித்து வருவதற்கான ஆதாரங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கனேடிய துருக்கிய இரட்டைக் குடியுரிமை பெற்றவரான ஈஸ் ஹப்பர் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து துருக்கியில் இருந்து வந்ததாக தெரிவித்துள்ள அவரின் நண்பர்கள், அவர் வெளிப்படையாக கருத்துக்களை முன்வைப்பவர் என்றும் கூறியுள்ளனர்.

துருக்கியில் இவ்வாறு அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தற்போது வழக்கமான சம்பவமாக உள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை துருக்கியில் கைது செய்யப்பட்டு்ள்ள கனேடியருக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கனேடிய வெளிவிவகாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் அந்தரங்கப் பாதுகாப்பு சட்டங்களைக் கருத்திற்கொண்டு மேலதிக விபரங்களை வெளியிடுவதற்கு அது மறுத்துள்ளது.