நாம் தமிழர் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் உயிரிழப்பு

நாம் தமிழர் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் உயிரிழப்பு

iuநேற்று நடைபெற்ற நாம் தமிழர் பேரணியின் போது தீக்குளித்த விக்னேஷ் என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ‘காவிரி உரிமை மீட்பு பேரணி’ என்ற பெயரில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஊர்வலம் நேற்று தொடங்கியது. இந்த ஊர்வலத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

சினிமா டைரக்டர்கள் சேரன், அமீர், ரவிமரியா, நிலத்தரகர் சங்க தலைவர் வி.என்.கண்ணன் மற்றும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியபடியே சென்றனர்.ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கிய ஊர்வலம் புதுப்பேட்டை வழியாக சென்றது. புதுப்பேட்டை கூவம் அருகே சென்றபோது, ஊர்வலத்தின் சென்றவர்கள் ஆக்ரோஷமாக குரல் எழுப்பியபடி வந்தனர். அப்போது ஒரு வாலிபர் திடீரென்று வேகவேகமாக கூச்சலிட்டுக்கொண்டே முன்னோக்கி சென்றார்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் பற்றி எரியும் தீயோடு, வலியால் கதறியபடி அந்த வாலிபர் சாலையில் ஓடினார். இதை பார்த்த ஊர்வலத்தில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக அந்த வாலிபரின் உடலில் பற்றி எரியும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். கட்சி கொடிகளை கிழித்தும், அருகில் உள்ள மரங்களில் இருந்து மரக்கிளைகள் பறித்தும் அந்த வாலிபர் உடலில் பற்றிய தீயை அணைத்தனர்.

இதையடுத்து உடனடியாக அந்த இளைஞரை சிலர் மீட்டு, போலீஸ் ஜீப் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதனைத்தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பலன்றி அந்த வாலிபர் உயிரிழந்தார். தீக்குளித்து உயிரை விட்டவர் மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பதும், நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.