காவிரி விவகாரம்: சித்தராமையாவை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு? 8 கடிதங்களுக்கும் பதிலளிக்காததால் சித்தராமையா அதிருப்தி

காவிரி விவகாரம்: சித்தராமையாவை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு? 8 கடிதங்களுக்கும் பதிலளிக்காததால் சித்தராமையா அதிருப்தி

bகாவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை பிரதமர் நரேந்திர‌ மோடி சந்திக்க மறுத்துவிட்டதால் காங்கிரஸ் கட்சியினர் அந்திருப்தி அடைந்து உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5–ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது. இதில், வருகிற 20–ந் தேதி வரை தினமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விடும்படி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. பஸ்கள், லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபையின் அவசர கூட்டம் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் செவ்வாய் கிழமை நடைபெற்றது.

20–ந் தேதி வரை தினமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சித்தராமையா அறிவித்தார். செவ்வாய் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, ”காவிரி பிரச்சினையில் தலையிடுமாறு பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். நமது தலைமை செயலாளர் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளார். நாளை(புதன்) பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். பிரதமர் நேரம் ஒதுக்கியதும் நான் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி பிரச்சினை குறித்து பேச உள்ளேன்,” என்றார்.

இந்நிலையில், “சித்தராமையா கடந்த இரு மாதங்களில் பிரதமருக்கு 8 முறை கடிதம் எழுதிஉள்ளார். ஆனால் ஒரு கடிதத்துக்கு கூட பிரதமர் மோடியில் இருந்து பதில் வரவில்லை. காவிரி விவகாரத்தில் வன்முறை வெடித்த நிலையில் பிரதமரை சந்திக்க 2 முறை நேரம் கேட்டார். நீண்ட அலைக்கழிப்புக்கு பிறகு புதன்கிழமை நேரம் ஒதுக்கி இருப்பதாக பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்தார்கள். ஆனால் சிறிது நேரத்தில் மோடி சித்தராமையாவை சந்திக்க மறுத்துவிட்டார் என தகவல் வெளியானது. மோடியின் இந்த அணுகுமுறையால் சித்தராமையா கடும் அதிருப்தி அடைந்துள்ளார்” என்று சித்தராமையாவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

முன்னதாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரி சதானந்த கவுடா பேசுகையில் “காவிரி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிடமாட்டார். சித்தராமையா பிரதமரை சந்திப்பதே கடினம். சித்தராமையா இவ்விவகாரத்தில் யாரையும் கலந்து ஆலோசிக்கவில்ல்லை.” என மீடியாக்களில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.