தைவானுக்கு சீனா எச்சரிக்கை ‘‘தலாய் லாமாவை உள்ளே விடக்கூடாது’’

தைவானுக்கு சீனா எச்சரிக்கை ‘‘தலாய் லாமாவை உள்ளே விடக்கூடாது’’

vதலாய் லாமாவை உள்ளே விடக்கூடாது என தைவானுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலாய் லாமா

தலாய் லாமா என்பது திபெத் புத்த மதத்தின் தலைமை பதவி ஆகும். இந்தப் பதவியில் தற்போது இருப்பவர், டென்சின் கியாட்சோ (வயது 81) ஆவார். இவர்தான் திபெத் மக்களின் அரசியல் மற்றும் ஆன்மிக தலைவராக திகழ்கிறார். உலகளாவிய அமைதிக்காக பாடுபடுகிறவர் என்ற வகையில், அவருக்கு 1989–ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால் அவரை சீனா, பிரிவினைவாத தலைவராகத்தான் பார்க்கிறது. சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள திபெத்துக்கு தன்னாட்சி உரிமை வேண்டும் என்று தலாய் லாமா வலியுறுத்தி வருவதுதான், இதற்கு காரணம். தலாய் லாமா சர்வதேச அளவில் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து வருவதை சீனாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஒபாமா சந்திப்புக்கு எதிர்ப்பு

கடந்த ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தலாய் லாமா சந்திப்பு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்தபோது, சீனா அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது.

இதற்கு பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சீனா தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இது குறித்து சீனா குறிப்பிடுகையில், ‘‘திபெத் விவகாரம் சீனாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பிற நாடுகள் தலையிட எந்த உரிமையும் இல்லை’’ என கூறியது.

தைவான் எம்.பி., அழைப்புக்கு எதிர்ப்பு

இந்த நிலையில் தலாய் லாமாவை செல்வாக்கு மிக்க தைவான் பாராளுமன்ற உறுப்பினர் பிரெடி லிம், இந்தியாவில் கடந்த வாரம் சந்தித்து பேசினார். இந்த பிரெடி லிம், சீனாவை விமர்சித்து வருபவர் ஆவார். அவர், தலாய் லாமாவை தைவானுக்கு வருமாறு அழைத்தார்.

இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தலாய் லாமாவை உள்ளே விடக்கூடாது என போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

‘கடும் விளைவுகள் ஏற்படும்’

இதுபற்றி சீனாவுக்கான தைவான் விவகார அலுவலக செய்தி தொடர்பாளர் மா ஜியாகுவாங் பீஜிங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தலாய் லாமா பிரிவினைவாத செயல்களை செய்வதற்கு ஆன்மிக உடை அணிந்திருக்கிறார். தைவானில் உள்ள சில சக்திகள், திபெத்துக்கு சுதந்திரம் கேட்கிற பிரிவினைவாதிகளுடன் சேருவதும், பிரச்சினைகளை ஏற்படுத்துவதும் தைவானுடனான உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

நாங்கள் அந்த பிரிவினைவாத சக்தியின் தைவான் வருகையை உறுதிபட எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்மிக தத்துவங்களை பகிர…

ஆனால் தைவானுக்கு தலாய் லாமாவை அழைத்துள்ள பிரெடி லிம்மின் உதவியாளர் கென்னி சாங் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், ‘‘தலாய் லாமா, தைவானில் மிகவும் மதிக்கப்படுகிறார். அவரை தைவானுக்கு பிரெடி லிம் அழைத்ததின் நோக்கம், அவர் தனது ஆன்மிக தத்துவங்களை பகிர்ந்து கொள்வதற்காகத்தான்’’ என குறிப்பிட்டார்.

தைவானுக்கு தலாய் லாமா அழைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், தைவான் வெளியுறவு மந்திரி டேவிட் லீ, எம்.பி.க்களிடம் இதுபற்றி பேசுகையில், ‘‘தலாய் லாமா தைவானுக்கு வருவது என்று முடிவு எடுத்தால், அது குறித்து கவனமுடன் பரிசீலிப்போம்’’ என கூறினார்.

இதேபோன்று தைவான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், ‘‘அவர் (தலாய் லாமா) விசா விண்ணப்பம் அளித்தால், அதை சட்டப்படி நமது அரசு பரிசீலிக்கும்’’ என கூறினார்.

தைவானின் தற்போதைய அதிபர் சாய் இங்க் வென் தேர்தலில் அபார வெற்றி பெற்ற போது அவரை தலாய் லாமா பாராட்டினார். இப்போது தலாய் லாமாவுக்கு தன் நாட்டு எம்.பி., அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் அது பற்றி அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

தைவானை சீனா தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு மாகாணமாகத்தான் கருதி வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.