காவிரி பிரச்சினையால் வன்முறை: இரு மாநில அரசுகளும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல்

காவிரி பிரச்சினையால் வன்முறை: இரு மாநில அரசுகளும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல்

kகாவிரி பிரச்சினையால் வன்முறை ஏற்பட்டதால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

காவிரி பிரச்சினையால் வன்முறை

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முதலில் 10 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. கடந்த 12–ந் தேதி அந்த உத்தரவில் மாற்றம் செய்த சுப்ரீம் கோர்ட்டு, 20–ந் தேதி வரை தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனால் கன்னட அமைப்பினர் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பெங்களூரு, மைசூர், மண்டியா மாவட்டங்களில் தமிழர்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை குறி வைத்து தாக்கினார்கள். வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தால் பெங்களூருவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல தமிழகத்திலும் சில இடங்களில் நடைபெற்ற சில சம்பவங்களால் பதற்றம் நிலவியது.

நீதிபதி அனுமதி

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பு சிவகுமார் என்பவர் சார்பாக மூத்த வக்கீல் ஆதிஷ் அகர்வால், வக்கீல் என்.ராஜாராமன் ஆகியோர் நேற்று ஆஜராகி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் வன்முறை சம்பவங்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. இரு மாநிலங்களிலும் கலவரத்தை தூண்டும் சிலரின் செயல்களால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அந்த மனுவை அவசர வழக்காக ஏற்று உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனு தாக்கல் செய்ய அனுமதிப்பதாகவும், அந்த மனு நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

பொது நல மனு தாக்கல்

இதனையடுத்து மனுதாரர் சிவகுமார் தரப்பில் நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் பொது சொத்துகளுக்கும், தனியார் சொத்துகளுக்கும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் பல இடங்களில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற சம்பவங்களால் வன்முறை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக தலையிட்டு இரு மாநில அரசுகளும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.