பேரறிவாளன் தாக்கப்பட்டது குறித்து விசாரணை செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

பேரறிவாளன் தாக்கப்பட்டது குறித்து விசாரணை செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

khjவேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு ராஜீவ் கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக வாழ்நாள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் வேலூர் சிறையில் சக கைதியால் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியை அறிந்து பேரதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பேரறிவாளன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

வேலூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் இன்று அவரது அறையிலிருந்து வெளியில் வந்த போது அவரது தலையில் இராஜேஷ் கண்ணா என்ற தண்டனைக் கைதி இரும்புக் கம்பியால் அடுத்தடுத்து பலமுறை தாக்கியதாகவும், இதில் பேரறிவாளனின் மண்டை உடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தலைக் காயத்திற்கு தையல் போடப்பட்ட நிலையில், வேலூர் சிறை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பேரறிவாளன் மீதான தாக்குதலை எதிர்பாராமல் நடந்ததாகவோ, உணர்ச்சி வேகத்தில் நடந்ததாகவோ கருத முடியாது.

சிறையில் பேரறிவாளனை சக கைதிகள் தாக்குவதற்கு எந்தவிதமான காரணமோ, நியாயமோ இல்லை. ஏனெனில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மற்ற கைதிகளிடம் நட்புடனும், பாசத்துடனும் பழகி வருகிறார்.

சிறையிலிருந்தபடியே படித்து பல பட்டங்களைப் பெற்ற பேரறிவாளன், மற்ற கைதிகளுக்கு ஆசிரியராக இருந்து கற்பித்து வருகிறார். இதனால் மற்ற கைதிகளும் பேரறிவாளன் மீது அன்பும், மரியாதையும் கொண்டுள்ளனர்.இத்தகைய சூழலில் பேரறிவாளன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் ஆபத்தான சதித் திட்டம் இருப்பதாகத் தோன்றுகிறது.

பேரறிவாளனுடன் ஒரே அறையில் இருந்த இராஜேஷ் கண்ணா சில நாட்களுக்கு முன் வேறு அறைக்கு மாற்றப்பட்டதாகவும், அதற்கு பேரறிவாளன் தான் காரணம் என்ற ஆத்திரத்தில் இத்தாக்குதலை இராஜேஷ் நடத்தியிருக்கலாம் என்றும் சிறை நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

இதை உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், இராஜேஷ் இடமாற்றம் செய்யப்பட்டது ஏன்? ஒரே அறையில் இருந்தால் இராஜேஷால் பேரறிவாளனுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டாரா? பேரறிவாளன் மீதான தாக்குதலை காவலர்கள் தடுக்காதது ஏன்?

தமிழகத்தின் பாதுகாப்பான சிறை என்று கூறப்படும் வேலூர் சிறையில், பேரறிவாளனை தாக்குவதற்கான இரும்புக் கம்பி கைதி இராஜேஷ் கண்ணாவுக்கு எப்படி கிடைத்தது? என ஏராளமான வினாக்களும், ஐயங்களும் எழுகின்றன. ஆனால், இந்த வினாக்களுக்கு சிறை நிர்வாகத்திடம் விடைகள் இல்லை.

பேரறிவாளன் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. அவர் ஏற்கனவே சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு சிகிச்சை அளிப்பதில் வேலூர் சிறை நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.

தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக சிறை விடுப்பில் (பரோல்) விடுவிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் சிறை நிர்வாகம் நிராகரித்து விட்டது. பேரறிவாளன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அவரை அங்கேயே தொடர்ந்து வைத்திருப்பது நல்லது அல்ல.

ராஜிவ் கொலையில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்றும், அவர் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதியதால் தான் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் கூறியிருக்கிறார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 3 தமிழர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநீதிமன்றம், அவர்கள் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்ட நிலையில் விடுதலை செய்ய தடையில்லை என்றும் கூறியிருக்கிறது.

எனவே, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் அரசியலமைப்பு சட்டத்தின் 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்ய தாமதமானால், அதுவரை 7 பேரையும் சிறை விடுப்பில் அனுப்ப தமிழக அரசு முன்வர வேண்டும். சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.